வடக்கு மிச்சிகன் வழியாக காரில் நாங்கள் செல்லும்பொழுது, பூமத்திய ரேகைக்கும் வடதுருவத்திற்கும் நடுவிலிருக்கும் 45ம் அட்சரேகையைக் குறிக்கும் அடையாளத்தைக் கடந்தபொழுது, மார்லின் “நம்பவே முடியவில்லை, உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” என்று வியந்தாள். நம்முடைய உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறதென்றும், நாம் எவ்வளவு சிறியவர்களாயிருக்கிறோம், என்பதைக் குறித்துப் பேசினோம். இருந்தும் அண்டசராசரத்துடன் ஒப்பிடும்போது, நமது சிறிய பூமி தூசிபோன்ற புள்ளியாகத்தான் காணப்படுகிறது. நம்முடைய பூமி பெரியதும் அண்டசராசரங்கள் மிகப்பெரியதுமாக இருந்தால் இவற்றை தமது வல்லமையால் சிருஷ்டித்த கர்த்தர் எவ்வளவு பெரியவர்? அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:16).
இது ஒரு நற்செய்தி, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நித்தியம் வரைக்கும் நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வந்த இந்த இயேசுதான் சகலத்தையும் சிருஷ்டித்தவர். தாம் மரிப்பதற்கு முந்தின இரவு “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு சொன்னார் (யோவா. 16:33).
வாழக்கையின் சிறிய, பெரிய சவால்களைச் சந்திக்கும்பொழுது சராசரங்களைப் படைத்தவரை நோக்கிக் கூப்பிடுவோம். அவரே மரித்து உயிர்த்தெழுந்தவர். அவரே நொறுக்கப்பட்ட உலகத்தை நமக்காக ஜெயித்தவர். நமது இக்கட்டான சமயங்களில் அவர் வல்லமையுடன் தமது சமாதானத்தை நமக்குத் தருகிறார்.
தேவனுடைய கிருபை அளவிட முடியாதது; அவருடைய இரக்கங்களுக்கு முடிவேயில்லை; அவருடைய சமாதானம் சொல்லிமுடியாதது.