என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தன. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும். அங்கு வசிக்க ஒரு இடம் கண்டு பிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும்  தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டும் என்ற பட்டியலைப் பார்த்த பொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).

தனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிர்கொண்டிருக்கும் சவால்களையும் அறியாத நிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார் சிறையில் அடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த, “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச.6) என்றெழுதினார்.

பவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக் கொண்டது. அது வாழ்க்கையைத் தலை கீழாக்குகிற பெரிய மாற்றமாய் இருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாய் இருக்கலாம், உடல் நலக்கேடாய் இருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாய் இருக்கலாம், இவை எல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுக் கொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக் குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கப்படுகிறோம். நாம் அதைச் செய்யும் பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்” (வச.7) என்கிறார்.