அழைக்கப்பட்ட ஒரு இசைக் குழுவினர் எங்கள் ஆலயத்தில் துதி ஆராதனையை நடத்தினர். அவர்கள் கிறிஸ்துவுக்காக கொண்டிருந்த வைராக்கியம் அனைவரையும் அசைத்தது. அவர்களின் உற்சாகத்தை எங்களால் உணரவும், பார்க்கவும் முடிந்தது.
அந்த இசை கலைஞர்கள் தாங்கள் அனைவரும் முன்னாள் கைதிகள் என வெளிப்படுத்தினார்கள். உடனே அவர்களின் பாடல்கள் எங்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும், அவர்களின் துதியின் வார்த்தைகள் அவர்களுக்குள் அதிக அர்த்தமுள்ளதாக இருப்பதையும் உணர்ந்தேன். உடைந்து போன வாழ்வு மீட்டெடுக்கப்பட்டதற்கு சாட்சியாக அவர்களின் ஆராதனை இருந்தது.
இந்த உலகம் வெற்றியை அரவணைத்துக் கொள்ளும். ஆனால், கடந்துவந்த தோல்விகள் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். எத்தனை முறை நாம் தோல்வியடைந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தேவன் நம்மை நேசிக்கிறார் என்ற நிச்சயத்தை நமக்குத் தருகிறது. ஏபிரெயர் 11ல் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாச வீரர்களின் பட்டியலுக்கு ‘தேவனால் மீட்டெடுக்கப்பட்ட தோல்விகள்’ என தலைப்பிடலாம் என போதகர் ஃஹரி இன்ரிக் கூறுகின்றார். ‘இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வாழ்க்கையில் குறையில்லாதவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவர் கூட இல்லை என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், தேவன் அவர்களின் தோல்விகளை மறுசீரமைப்பு வேலையில் இருக்கிறார்… இதுதான் தேவக்கிருபையின் மிகப்பெரிய அடிப்படை கொள்கை எனவும் கூறுகிறார்.
சங்கீதம் 145 தருகின்ற ஆறுதலையும் தேவனுடைய அதிசயமான கிரியைகளையும் (வச. 5,6) அவருடைய ராஜ்ஜியத்தின் மகிமைப் பிரதாபத்தையும் (வச. 11) நான் மிகவும் நேசிக்கிறேன். இது அவருடைய மனதுருக்கத்தையும் (வச. 8,9) உண்மையையும் (வச. 13) கீழே விழுந்தவர்களை துக்கிவிடுகிற அவருடையை பண்பையும் (வச. 14) கூறுகிறது. ஆம், உண்மையாகவே அவர் நம்மை மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
நீங்கள் இதற்குமுன் தோல்வியடைந்ததுண்டா? ஆம், நாம் அனைவரும் தோல்வியடைந்திருக்கிறோம். நீங்கள் மீட்டெடுக்கப்பட்டு விட்டீர்களா? அவரால் மீட்டெடுக்கப்பட்ட நாம் அனைவரும் அவருடைய கிருபையின் சாட்சிகள்.
நம்முடைய தோல்விகளின் கதைகள் தேவனுடைய வெற்றியின் கதைகளாகும்.