1992ல் ஏற்பட்ட ஒரு காயத்தினால் எனது மேல் முதுகு தோல்பட்டைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் அதிக வலியினால் அவதியுற்றேன். அத்தகைய வேதனையில் நம்பிக்கையிழந்த வேளைகளில் தேவனை நம்பிக்கையோடு துதித்தல் என்பது எப்பொழுதும் சுலபமானதல்ல. ஆனால், தேவனுடைய மாறாத பிரசன்னம் என்னைத் தேற்றியது. அவர் என்னை பெலப்படுத்தி அவருடைய மாறாத நன்மையினாலும், அளவற்ற வல்லமையினாலும் தாங்கி நடத்தும் கிருபையினாலும் ஆறுதல்படுத்தினார். சிலவேளை நான் கடவுளை சந்தேகிக்கும் போது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் திட நம்பிக்கையினால் தைரியப்படுத்தப்பட்டேன். அவர்கள் நம்புவதற்கு ஏதுவில்லாத சூழ்நிலையிலும் தேவனைப் பணிந்து கொண்டு தேவன் அவர்களோடிருக்கிறார் என்று நம்பினார்கள்.
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவில் போடப்படுவீர்கள் என எச்சரித்திருந்தும் அவர்கள் உண்மை தேவனைவிட்டு விட்டு பொற்சிலையை வணங்கவில்லை (தானி. 3:13-15). இந்த மூன்று மனிதரும் தைரியத்தையும் திட நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள் (வச. 17). அந்த ஆபத்தான வேளையிலும் தேவன் தங்களை விடுவியாமல் போனாலும்; அவர் ஆராதிக்க உகந்தவரல்ல என்று ஒருபோதும் சந்தேகப்படவில்லை (வச. 18). திட நம்பிக்கையிலிருந்த அவர்களின் தேவையின் போது, தேவன் அவர்களை தனியே விடவில்லை. தேவன் அக்கினிச்சூளையின் நடுவே அவர்களோடிருந்து அவர்களைப் பாதுகாத்தார் (வச. 24-25).
தேவன் நம்மையும் தனியே விடுவதில்லை. நேபுகாத்நேச்சாரின் அக்கினிச்சூளைபோன்ற சோதனைகளின் மத்தியிலும் நம்மோடிருக்கிறார். நித்தியத்தின் மறுபக்கத்தில் (இவ்வுலகில்) ஒரு வேளை நம் வேதனைகள் முடிவில்லாதவைகளாயிருப்பினும், வல்லவரும், நம்பிக்கைக்குரியவரும், நல்லவருமாக தேவன் இருக்கிறார். நாம் அவரின் மாறாத அன்பின் பிரசன்னத்தைச் சார்ந்து கொள்ளுவோமாக.
நம்பிக்கை என்பது நமது சூழ்நிலைகளைச் சார்ந்தல்ல,
சர்வவல்ல தேவனின் மாறாத தன்மைகளைச் சார்ந்திருக்கிறது.