சமீப காலத்தில் நான் விமான பயணிகளின், முன் பதிவு எண் இல்லாதோரின் வரிசையில் கடைசியாக நின்றுகொண்டிருந்தேன். விமான இறக்கையின் அருகில் அமைந்த மத்திய வரிசையில் ஒரு இருக்கையை கண்டுபிடித்தேன். ஆனால், எனது கைப் பையை வைப்பதற்கு கடைசி வரிசையின் மேலுள்ள விரிவில்தான் இடம் இருந்தது. அப்படியானால் நான் அனைவரும் வெளியேறும் மட்டும் காத்திருந்து, கடைசியில் தான் எனது கைப்பையை எடுக்கமுடியும்.
நான் எனக்குள்ளாக சிரித்துக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். அப்பொழுது “நீ காத்திருக்க வேண்டிய நேரம் உன்னை துக்கப்படுத்தாது அது உனக்கு நன்மையே செய்யும்” என்ற தேவனுடைய வார்த்தை எனக்குள்ளே தோன்றியது. எனவே விமானம் தரையிறங்கியதும், மிஞ்சிய நேரத்தை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள நான் தீர்மானித்து, சக பயணிகளின் உடைமைகளை கீழே இறக்குவதற்கும், விமான பணியாளரோடு சேர்ந்து சுத்தப்படுத்தவும் ஆரம்பித்தேன். சக பயணி ஒருவர் என்னை விமான பணியாளர் என்று எண்ணியபோது நான் மறுபடியும் சிரித்து கொண்டேன். வேளை வந்தபோது என் பையை எடுத்துக் கொண்டு இறங்கினேன்.
அந்த நாளின் அநுபவம் இயேசு தன் சீடர்களிடம் கூறிய வார்த்தையை நினைவுபடுத்தியது. “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்” (மாற். 9:35).
நான் காத்திருக்க வேண்டிய அவசியமானதால் காத்திருந்தேன். ஆனால், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படி தங்களை வலிய ஈடுபடுத்திக் கொள்ளுபவர்களுக்கு, ‘கீழானவற்றை மேலாக்கும்’ தேவனுடைய ராஜ்ஜியத்தில் கனமுள்ள ஓர் இடமுண்டு.
‘நான் தான் முதல்” என முந்திக் கொள்ளும் இந்த அவசர உலகில் “இயேசுவும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத். 20:28).
நாம் பிறருக்கு ஊழியம் செய்தலே தேவனுக்குச் செய்யும் சிறந்த ஊழியமாம். நாம் எவ்வளவு தூரம் நம்மைத் தாழ்த்துகிறோமோ அவ்வளவு தூரம் நாம் தேவனை நெருங்குகிறோம்.
இயேசுவினுடைய ராஜ்ஜியம் கீழானவற்றை மேலாக்குகிறது.