அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பிக்கப்பட்ட ஒரு சபை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஏனெனில் அந்த சபை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த கைதிகள், மீண்டும் சமுதாயத்தில் நன்முறையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உதவிகள் செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த திருச்சபையில் அனைத்து பிரிவு மக்களும் பங்கெடுக்கின்றனர். அந்தத் திருச்சபை பரலோகத்திற்கு மாதிரியாக இருக்கிறது. ஏனென்றால் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட பாவிகளாக, இயேசு கிறிஸ்துவின் அன்பினால் இணைக்கப்பட்டவர்களாக, இருப்பதினால் தான் அச்சபையை அதிகமாக நேசிக்கிறேன்.
சில சமயங்களில் திருச்சபை என்பது மன்னிக்கப்பட்ட பாவிகள் கூடும் பாதுகாப்பான அடைக்கலம் போல இல்லாத பொழுதுபோக்குக் குழு கூடும் இடம் போல இருந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்தரம் உடைய மக்கள் ஒரே குழுவாகக் கூடுவது இயற்கையான காரியமாகும். எப்படிப்பட்ட மக்களோடு அவர்கள் இலகுவாக இணைந்து செயல்பட முடியுமோ, அப்படிப்பட்ட மக்கள் மட்டும் இணைந்து கொள்வது இயற்கையானது. இப்படிச் செய்வதால் விடப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக உணர்வார்கள். “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்” (யோவா. 15:12) என்று இயேசு கூறிய பொழுது, அப்படிப்பட்ட பிரிவினையை மனதில் எண்ணவில்லை. அவருடைய திருச்சபையில் உள்ள மக்கள் அனைவரும், தேவனுடைய அன்பை எல்லாரோடும் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
ஒதுக்கப்பட்ட மக்கள் மனம் பாதிப்படைந்தால், அன்பான அடைக்கலத்தையும், ஆறுதலையும், மன்னிப்பையும் இயேசுவில் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தான் அப்படிப்பட்ட மக்கள் திருச்சபையில் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதிலும் விசேஷமாக நம்முடைய தரத்திலே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் காட்ட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை, நம்மூலமாக நேசிக்க இயேசு விரும்புகிறார். மக்கள் அனைவரையம் அன்பினால் இணைத்து ஆராதனை செய்வது எவ்வளவு மகிழ்ச்சியானது! அது பரலோகத்தின் ஒரு பகுதியை பூமியிலே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது போன்றதாகும்.
கிறிஸ்துவின் அன்பை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.