ஏதோ ஒரு பொருள் நொருங்குகிற பலமான சத்தத்தைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த சத்தம் எதிலிருந்து வருகிறது என்று அறிந்து வேகமாக சமையலறைக்கு ஓடினேன். காலியாக இருந்த காப்பி போடும் கருவியின் சுவிட்ச்சை தெரியாமல் போட்டு வந்திருக்கிறேன். வேகமாக ஓடிப்போய் அக்கருவியை மின் இணைப்பிலிருந்து நீக்கிவிட்டு அதன் கைப்பிடியை பிடித்து துக்கினேன். அப்பாத்திரத்தை கீழேயுள்ள டைல் கற்களின் மீது வைக்க இயலுமா என்று பார்க்க அதின் அடிப்பாகத்தை என் விரல் நுனியினால் தொட்டேன் அதன் சூடான அடிப் பக்கம் என் விரல்களின் நுனியை சுட்டு எனது மெல்லிய தோலில் கொப்பளங்கள் ஏற்பட்டது.
எனது கணவர் எனது காயங்களுக்கு மருந்து போட்ட பொழுது என் தலையை அசைத்தேன். “அந்தப் பாத்திரத்தின் அடிப்பக்கம் சூடாக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். ஆனால், ஏன் அதைத் தொட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினேன்.
அந்த தவற்றை நான் செய்ததின் விளைவைவிட அதிகமான பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பாவத்தைக் குறித்து நமது எதிர்வினை என்ன என்பது பற்றி, பவுல் வேதாகமத்தில் தெளிவாகக் குறிப்பிட்டது எனக்கு ஞாபகம் வந்தது.
“நான் செய்கிறது எனக்கே சம்மதி இல்லை. நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுப்பதையே செய்கிறேன்” (ரோம. 7:15) என்று பவுல் தனது அவல நிலையை ஒப்புக் கொள்ளுகிறார். வேத வசனங்கள் எது சரி, எது தவறு என்று தெளிவாக தீர்மானிக்கிறது என்றும் (வச. 7) பாவத்திற்கு எதிராக மாம்சத்திற்கும், ஆவிக்கும் இடையே இடைவிடாத போராட்டம் தொடர்ந்து நடக்கிறதென்றும், பவுல் திட்டமாக கூறுகிறார் (வச. 15-23) அவர் அவருடைய பெலவீனத்தை அறிக்கை இட்டு தேவனுடைய உதவியினால், இப்பொழுதும், எப்பொழுதும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறார் (வச. 24-25).
நாம் நமது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது, அவர் அவருடைய பரிசுத்தாவியை நமக்கு அருளி, நன்மையான காரியங்களை தேர்ந்தெடுக்கக்கூடிய வல்லமையை நமக்குத் தருகிறார் (8:8-10). தேவனுடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியத்தக்கதாக நம்மை பெலப்படுத்தி அவர் வழி நடத்துகிறார். இதனால் தேவனை நேசிப்பவர்களுக்கு அவர் அருளும் பரிபூரண வாழ்க்கையை பெற்றுக்கொள்ள தடையாக உள்ள நமது பாவங்களிலிருந்து, அவர் நம்மை மீட்டுவிடுகிறார்.
பரிசுத்தாவியானவர் அவருடைய அன்பினாலும் அவருடைய
கிருபையினாலும் நம்மை மாற்றி அமைக்கிறார்.