மாற்கு லேபர்டன் எழுதியுள்ள “பெயர் குறிப்பிடுவதின் மூலம் நடத்துதல்” என்ற இதழில் ஒரு பெயரின் சக்தியைப் பற்றி எழுதியுள்ளார். “இசைத்திறமை வாய்ந்த அவரது நண்பர் ஒருவர், ஒருநாள் என்னை ‘இசைத்திறமை’ என்று என்னை பெயரிட்டு அழைத்தபொழுது, அது என்னில் ஏற்படுத்தியதாக்கத்தை இன்னும் உணருகிறேன். இசைத்திறமை என்று ஒருவர் கூட என்னை அழைத்தது கிடையாது. நான் எந்த ஒரு இசைக்கருவியையும் இசைத்தது கிடையாது. நான் ஒரு தனிப்பாடகரும் அல்ல ஆயினும் நான் அறியப்பட்டவனாகவும், நேசிக்கப்பட்டவனாகவும் உணர்ந்தேன். அந்த நண்பர் என்னை உற்று கவனித்து, என்னிடத்திலுள்ள இசைத் தன்மையை உறுதிப்படுத்தி, எனக்குள் ஆழமாக இருந்த உண்மையை அறிந்து பாராட்டினார்” என்று கூறினார்.
இயேசு சிமியோனின் பெயரை மாற்றி புதுப்பெயரை இட்டபொழுது, அவனும் இப்படித்தான் ஒருவேளை உணர்ந்திருப்பான். இயேசுதான் மேசியா என்று அந்திரேயா உறுதியாக அறிந்து கொண்டவுடனேயே, அவன் அவனது சகோதரன் சிமியோனைக் கண்டு அவனை இயேசுவிடம் அழைத்து வந்தான் (யோவா. 1:41-42). இயேசு அவனது ஆத்துமாவிற்குள் உற்று நோக்கி சிமியோனின் உள்ளத்தில் ஆழமான சத்தியம் புதைந்து கிடப்பதை உறுதிப்படுத்தி பாராட்டினார். ஆம், இயேசு சிமியோனில் காணப்பட்ட தோல்விகளையும், திடீரென உணர்ச்சிவசப்படும் தன்மையையும் அறிந்திருந்தார். அதற்கு மேலாக சபைக்குத் தலைவனாகக் கூடிய உள்ளான ஆற்றல் அவனுக்குள் இருப்பதை இயேசு கண்டார். உடனே அராமிக் மொழியில் பேதுரு அதாவது கல் என்று அர்த்தமுடைய கேபா என்று அவனுக்குப் பெயரிட்டார் (யோவா. 1:42; மத். 16:18).
அது போலத்தான் நமக்கும், தேவன் நமது பெருமை, கோபம், பிறர் மீது உண்மையான அன்பற்ற தன்மை இவைகளைப் பார்க்கிறார். அதோடுகூட கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதையும் அறிந்திருக்கிறார். அவர் நம்மை நீதிமான்களாக்கப்பட்டவர்களென்று, ஒப்புரவாக்கப்பட்டவர்களென்றும் (ரோம. 5:9-10) மன்னிக்கப்பட்டவர்களென்றும், பரிசுத்தரென்றும், பிரியர்களென்றும் (கொலோ. 2:13; 3:12) அழைக்கப்பட்டவர்களென்றும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்றும் உண்மையுள்ளவர்களென்றும் (வெளி. 17:14) அழைக்கிறார். தேவன் உங்களை பார்க்கும் முறையை நினைவு கூர்ந்து, அக்குண லட்சணங்களே நீங்கள் யார் என்பதை விளக்கட்டும்.
கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு இருக்கும் அடையாளத்தை யாராலும் திருட முடியாது.