ஓவ்வொரு நாளும் நம்முடைய நேரம் நம்மால் நம்ப இயலாத அளவிற்கு, பல்வேறு குறுக்கீடுகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறதென்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நமது வீட்டிலோ அல்லது பணி செய்யும் இடத்திலோ, ஒரு தொலைபேசி அழைப்பு, அல்லது எதிர்பாராத ஒருவரின் வருகை நமது முக்கியமான நோக்கத்தினின்று நமது கவனத்தை மாற்றிவிடுகிறது.

அன்றாட வாழ்வில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய முறையில் குறுக்கீடுகள் ஏற்படுவது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இயேசு குறுக்கிடுகளாகத் தோன்றிய அநேக காரியங்களை வேறுபட்ட முறைகளில் கையாண்டார். சுவிசேஷங்களில்
அநேகந்தடவை தேவையிலுள்ள ஒருவருக்கு உதவி செய்ய, அவர்செய்து கொண்டிருந்த செயலை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பதைப் பார்க்கிறோம்.

இயேசு சிலுவையில் அறையப்பட எருசலேமிற்கு செல்லும் வழியில், சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்!” (லூக். 18:35-38) என்று சத்தமிட்டு கூப்பிட்டான். கூட்டத்திலிருந்த சிலர் அவனை அமைதியாக இருக்கும்படி அதட்டினார்கள். அவனோ தொடர்ந்து இயேசுவை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். இயேசு நின்று, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். “ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்.” என்றான். “இயேசு அவனை நோக்கி நீ பார்வையடைவாயாக. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார்; (வச. 41-42).

உண்மையாகவே நமது உதவி தேவைப்படும் மக்களால், நமது செயல் திட்டங்கள் பாதிக்கப்படும் பொழுது நாம் கரிசனையுடன் எப்படி செயல்பட வேண்டுமென்று தேவனிடம் ஆலோசனை கேட்கலாம். நாம் இடையூறுகள் என்று நினைக்கும் காரியங்கள் ஒருவேளை அன்றய நாளுக்குரிய தேவனுடைய திட்டமாக இருக்கலாம்.