“அவனுடைய துண்டு என்னுடையதைக் காட்டிலும் பெரியது!”
நான் சிறுவனாக இருந்தபோது, நானும் என் சகோதரர்களும் என் தாயார் வீட்டில் தயாரித்த பையை (Pie) பங்கிடும் போது சண்டையிடுவதுண்டு. ஒரு நாள் என் தந்தை எங்களின் இந்த வேடிக்கை நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, தன் உயர்த்தப்பட்ட கண் புருவங்களோடு அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் தட்டினை உயர்த்தி பிடித்து “தயவு கூர்ந்து உன் உள்ளம் போன்ற பெரியதொரு துண்டினை எனக்குத் தா” என்றார். என் தாயார் சிரித்துக் கொண்டே மிகப் பெரிய பகுதியை அவருக்குக் கொடுத்த போது, நானும் என் சகோதரர்களும் அதிர்ந்து அமைதியாக கவனித்தோம்.
நாம் பிறருடைய உடைமைகள் மீது கண்வைக்கும் போது பொறாமை வந்து விடுகிறது. ஆனாலும் தேவனுடைய வார்த்தைகள் நம் கண்களை இந்த உலக பொருட்களைவிட விலையேறப் பெற்ற ஒன்றின் மீது பதிக்கச் செய்கின்றன. “கர்த்தாவே, நீரே என் பங்கு நான் உமது வசனங்களைக் கைக் கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உமது தயவுக்காகக் கெஞ்சுகிறேன்” (சங். 119:57-58). தேவனுக்கு மிக அருகில் இருப்பதைவிட சிறந்தது வேறெதுவுமில்லை என்ற உண்மையை பரிசுத்த ஆவியானவரால் ஏவவ்பட்டு எழுதியவர் நமக்குத் தெரிவிக்கின்றார்.
அன்பு நிறைந்த, முடிவு இல்லாதவராகிய நம்முடைய படைப்பின் கர்த்தாவைவிட மேலான பங்கு நமக்கு என்ன இருக்க முடியும்? அவருக்கு இணையானது இப்புவியில் வேறொன்றும் இல்லை. எதுவும் நம்மை அவரிடமிருந்து பிரிக்க முடியாது. மனிதனின் ஏக்கமெல்லாம் ஒரு அகன்ற வெற்றிடம் போல இருக்கிறது. ஒருவன் இவ்வுலகில் அனைத்தையும் அடைந்தாலும் அவனுடைய வாழ்வு பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. ஆனால், தேவன் நம்முடைய மகிழ்ச்சியின் ஊற்றாக மாறும் போது நாம் உண்மையான நிறைவைப் பெற்றுக் கொள்வோம். நமக்குள்ளேயுள்ள வெற்றிடத்தை தேவனாலே மட்டும்தான் நிரப்ப முடியும.; அவராலேயே நமது இதயத்திற்கேற்ற அமைதியைத் தர முடியும்.
நாம் அவருடையவர்களாகும் போது, அவர் என்றென்றும் நம்முடையவராவார்.