முன்னால் கைதிகள் மீண்டும் சமுதாயத்தோடு இணைந்து வாழ உதவும் ஒரு அமைப்பாகச் செயல்படும் அந்த இல்லத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நான் மேரியைப் பார்ப்பதுண்டு. என்னுடைய வாழ்வு அவளுடைய வாழ்க்கையை விட வித்தியாசமானது. அவள் இப்பொழுதுதான் சிறையை விட்டு வெளியே வந்தவள். போதையிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மகனிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாள். இப்படியாக அவள் சமுதாயத்தின் ஓர் ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.
மேரியைப் போன்று சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வதென்றால் என்னவென்று அடிமையான ஒநேசிமுக்குத் தெரியும். ஒநேசிமு தன்னுடைய கிறிஸ்தவ எஜமான் பிலேமோனுக்குத் துரோகம் இழைத்த காரணத்தினால், இப்பொழுது சிறையில் இருக்கிறான். அங்கிருக்கையில் அவன் பவுலைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையுள்ளவனாகிறான் (வச. 10). மனம்மாறியவனாக இருந்த போதிலும் ஒநேசிமு ஒரு அடிமை. பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் ஒரு கடிதத்தோடு அனுப்புகிறான். அதில் ஒநேசிமுவை “இனிமேல் அவன் அடிமையானவனாக அல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும், பிரியமுள்ள சகோதரனாகவும் இருக்கும்படிக்கு (பிலே. 1:15) ஏற்றுக் கொள்ளும்படி எழுதுகிறான்.
பிலேமோன் இப்பொழுது ஒநேசிமுவை அடிமையாகவா? அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாகவா? எதைத் தேர்வு செய்யப் போகிறான்? நானும் இப்பொழுது எதைத் தேர்ந்து கொள்ளப் போகிறேன்? மேரியை ஒரு முன்னாள் குற்றவாளி, போதையின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டு வருபவளாகவா? அல்லது இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் முழுவதும் மாற்றப்பட்டவளாகவா? மேரி கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரி எங்களுடைய விசுவாசப் பயணத்தில் இருவரும் இணைந்து நடக்கும் பாக்கியம் பெற்றவள்.
நம்முடைய சமுதாய பொருளாதார நிலைகள், பரிவுகள், கலாச்சார வேறுபாடுகள் நம்மை எளிதில் பிரித்துவிடலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த அனைத்துத் தடைகளையும் அகற்றி நம் வாழ்வையும் உறவுகளையும் நிரந்தரமாக மாற்றி நம்மைப் புதிப்பிக்கும்.
சுவிசேஷம் மக்களையும், உறவுகளையும் மாற்ற வல்லது.