என்னுடைய கணவன் ஜாக் 26 மைல்கள் தொடர் ஓட்டத்தின் 25வது மைலில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் இழந்து விட்டார். இதுதான் அவருடைய முதல் மாரத்தான். இவர் தனியாக ஒடுகின்றார். உதவும் நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக நின்றபின், முற்றிலும் வலுவிழந்தவராக உணர்ந்து அருகிலுள்ள புல் தரையில் உட்கார்ந்து விட்டார். நிமிடங்கள் கடந்தன. அவரால் எழும்ப முடியவில்லை. அவர் இந்த ஓட்டத்திலிருந்து விலக்கிவிட எண்ணிய போது, கென்ட்டக்கியைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய இரு பள்ளி ஆசிரியைகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் அறிமுகமில்லாதவர்களாயிருந்த போதிலும் ஜாக்கை கவனித்து, தங்களோடு ஓட விரும்புகிறீர்களா? எனக்கேட்டார்கள். உடனடியாக அவருடைய பெலன் புதுப்பிக்கப்பட்டது. ஜாக் எழுந்த அந்த இரு பெண்களின் துணையோடு தன் ஓட்டத்தை முடித்தார்.
ஜாக்கை ஊக்குவித்த அவ்விரு பெண்களும் மோசேயின் இரு நண்பர்களான ஆரோன், ஊர் என்பவர்களை எனக்கு நினைப்பூட்டுகிறது. இவ்விருவரும் இஸ்ரவேலரின் தலைவன் மோசேக்கு ஒரு முக்கிய கட்டத்தில் உதவினர் (யாத். 17:8-13). இஸ்ரவேலர் எதிரிகளால் தாக்கப்படுகின்றனர். அந்த போர்க்களத்தில் மோசே தன் கோலை உயர்த்தி பிடித்த போது (வச. 11) இஸ்ரவேலர் மேற்கொண்டனர். மோசேயின் கைகள் தளர்ந்து போகையில், ஆரோனும், ஊரும் மோசேயின் இருபுறமும் நின்று அவனுடைய புயங்களை சூரியன் மறையும் வரை தாங்கிப் பிடித்தனர் (வச. 12).
தேவனைப் பின்பற்றுவது என்பது ஒரு தனி முயற்சியல்ல. நம் வாழ்க்கை ஓட்டத்தை தனியாக ஓட அவர் நம்மை உருவாக்கவில்லை. தேவன் நம்மை அழைத்த காரியங்களைக் செய்ய முற்படும் போது நண்பர்கள் நமது கஷ்டங்களில் நமக்கு உதவியாக வந்து கஷ்டங்களைக் கடந்து செல்ல உதவுகின்றனர்.
கர்த்தாவே, நான் உம்மை தொடர்ந்து பின்பற்ற என்னை ஊக்குவிக்கின்ற உறவுகளுக்காக உமக்கு நன்றி சொல்லுகின்றேன். நானும் பிறரை பெலப்படுத்துகின்ற ஒருவனாக விளங்க எனக்கு உதவியருளும்.
தேவனைப் பின்பற்றுவதில் நிலைத்திருக்க நண்பர்கள் நமக்கு உதவுகின்றனர்.