“தேவன் உங்கள் வாழ்வில் ஏதேனும் புதியதை செய்துகொண்டிருக்கிறாரா?” என்ற கேள்வியை நான் சமீபத்தில் பங்கேற்ற ஒரு குழுவின் தலைவர் கேட்டார். கடினமான நிலைமைகளைக் கையாண்டு கொண்டிருக்கிற என் சிநேகிதி மின்டி இதற்குப் பதிலளித்தாள். வயதான பெற்றோர்களை கவனிப்பதில் பொறுமைமையும், கணவனின் உடல் நலக்குறைவில் சகிப்புத்தன்மையையும், இன்னமும் இயேசுவை பின்பற்ற தேர்ந்துகொள்ளாத பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் புரிந்துகொள்ளவும் பொறுமை தேவையாயிருக்கிறது. மேலும் அவள் நாம் சாதாரணமாக நினைப்பதற்கு சற்று மாறாக உள்ளான ஒரு கருத்தினையும் கூறினாள். “நான் அன்புகூரும்படியாக என்னுடைய திறமையையும் சந்தர்ப்பங்களையும் தேவன் விரிவாக்கித் தருவதன் மூலம் புதிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என நான் நம்புகிறேன்” என்றாள்.

அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிகேயர் சபையின் புதிய விசுவாசிகளுக்காக செய்யும் ஜெபமும் இதனோடு நன்கு ஒத்திருக்கிறது. “நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வாராக” (1 தெச. 3:12). பவுல் அவர்களுக்கு இயேசுவைக் குறித்துக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு கலவரம் ஏற்பட்டபடியால் திடிரென அவர்களை விட்டுப் பிரிய நேர்ந்தது (அப். 17:1-9). பவுல் கடிதத்தின் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகின்றார் (1 தெச. 3:7-8). மேலும் அவர்கள் மற்றெல்லா மனுஷரிடத்திலும் வைத்திருக்கிற அன்பில் தேவன் அவர்களைப் பெருகப் பண்ணவேண்டுமென ஜெபிக்கிறார்.

கடினமான சூழல்கள், நாம் அது ஏன்? அல்லது இது ஏன் எனக்கு ஏற்பட வேண்டும்? என முறையிடுபவர்களாக இருக்கின்றோம். அத்தகைய கடின சூழல்களைக் கையாள மற்றொரு வழி என்னவென்றால், அந்த சந்தர்பங்களில் நாம் பிறர் மீது அன்பு செலுத்த உதவும்படி தேவன் நம் உள்ளங்களில் அவருடைய அன்பினை இன்னும் பெருக்கும்படி கேட்பதுவே!