ஜான் நியூட்டன் இவ்வாறு எழுதினார், “நான் வீட்டிற்கு போகும் வழியில் 50 காசை தொலைத்துவிட்ட ஒரு பிள்ளையை சந்திக்கிறேன். இன்னொரு 50 காசு நாணயத்தை அப்பிள்ளையிடம் கொடுப்பதன் மூலம் அதன் கண்ணீரை நான் துடைக்கக் கூடுமானால் நான் ஒரு நன்மை செய்துவிட்டதாக உணருகிறேன். பெரிய காரியங்களைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் இது போன்ற சிறிய காரியங்களை நான் அசட்டை செய்யக்கூடாது!”

இன்றைய உலகில் ஆறுதலைத் தேடி அலைவோர் எங்கும் உள்ளனர்: ஒரு பலசரக்குக் கடையின் காசாளர் தனது குடும்பப் பொருளாதார நெருக்கடியினிமித்தம் இரண்டாம் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது; சொந்த வீட்டிற்குத் திரும்ப வாஞ்சிக்கும் ஒரு அகதி; வாழ்வில் நம்பிக்கையை முற்றிலும் இழந்து கவலைப்படும் ஒரு கணவனற்ற தாய்; தான் பயனற்றவனாய் வாழ்கிறேனா என அஞ்சிடும் ஒரு தனிமையான முதியவர்.

ஆனால், நாம் செய்ய வேண்டியது என்ன? சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்” என்று தாவீது எழுதினார் (சங். 41:1) நாம் வாழ்வில் சந்திக்கின்றவர்களின் வறுமையை ஒழிக்க நம்மால் கூடாததென்றாலும், நாம் அவர்களைக் குறித்து கரிசனை கொள்ளலாம். “கவனம் செலுத்துங்கல்” நாம் மனிதர் மேல் அக்கறை கொள்வதை அவர்கள் அறிந்திடச் செய்யலாம். தேவையிலிருப்போரை சமாளிப்பது கடினமென்றாலும் அவர்களைப் பட்சமாகவும் மரியாதையாகவும் நாம் நடத்தலாம். அவர்களது வாழ்வின் கதைகளை ஆர்வத்தோடு கேட்கலாம். அவர்களுக்காக, அவர்களோடு சேர்ந்து நாம் ஜெபிக்கலாம். அதுவே எல்லாவற்றைக் காட்டிலும் மேலான உதவியானது, குணமாக்க வல்லது.

இயேசுவானவரின் அந்தப் புராதனமான முரண்பாடாய்த் தோன்றும் வார்த்தைகளை நினைவு கூருங்கள்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35). பிறரது தேவைகளைக் கவனத்தில் கொள்ளுவது பலனளிக்கவல்லது, ஏனென்றால் மற்றவர்களுக்காக நாம் செயல்படும்போது அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஏழைகளின் மேல் சிந்தை கொள்ளுவோமாக!