கானா நாட்டில் நானும் எனது சகோதரனும் சிறு குழந்தைகளாயிருந்த போது நடந்த ஒரு கதையை நான் பல முறை கூறிவந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தபடி எனது சகோதரன் ஒரு நல்ல பாம்பின் மேல் தனது பழைய, இரும்பாலான மூன்று சக்கர சைக்கிளை நிறுத்திவிட்டான். மிகவும் கனமான அந்த சைக்கிளின் முன் சக்ககரத்தில் அந்தப் பாம்பு சிக்கிக்கொண்டது.
எனது தாயாரும் சித்தியும் மரித்தபின், இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட எனது தாயாரின் கடிதத்தை நாங்கள் கண்டெடுத்தோம். உண்மையில், அந்தப் பாம்பின் மேல் சைக்கிளை நிறுத்தியது நான்தான் என்றும், அதை என் தாயாருக்கு என் சகோதரன் அறிவிக்க ஓடினான் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்ணால் பார்த்த என் தாயாரின் வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்தின.
துல்லியமான பதிவுகளின் முக்கியத்துவத்தை லூக்கா அறிந்திருந்தார். எவ்வாறு இயேசுவின் சரிதை “ ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தார்கள்” (லூக். 1:2) என்றும், “அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று” (வச. 4) என்றும் லூக்கா விளக்கமளிக்கிறார். தேயோப்பிலுவுக்கு அவர் எழுதுகையில், “…உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும்” (வச. 3) என்று கூறுகிறார். இவ்வாறாக உருவானதுதான் லூக்கா சுவிஷேம். பின்பாக, அப்போஸ்தலர் நடபடிகளின் முகவுரையை எழுதும் லூக்கா, “அவர் பாடுபட்ட பின்பு, இயேசுவானவர் அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” (அப். 1:3) என எழுதியுள்ளார்.
நமது விசுவாசமானது மற்றவர்கள் நமக்குச் சொன்னதைச் சார்ந்தோ, மற்றவரது விருப்பநிலை சார்ந்தோ கிடையாது. அது தேவனோடு மனிதருக்குச் சமாதானம் உண்டாக்க வந்த இயேசுவானவரின் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இயேசுவானவரின் கதை நிலைத்து நிற்கிறது!
கலப்படமற்ற விசுவாசம் பகுத்தறிவில் வேரூன்றியுள்ளது!