கி.பி. 2016ன் கோடைகாலத்தில், போக்கிமேன் கோ எனப்படும் ஸ்மார்ட்போனில் விளையாடும் விளையாட்டை விளையாடுமாறு எனது அக்கா மகள் என்னைக் கட்டாயப்படுத்தினாள். இது போனின் கேமரா உதவியால் விளையாடுவது. போக்கிமேன் என்றழைக்கப்படும் சிறிய ஜீவன்களைப் பிடிப்பதே இவ்விளையாட்டின் நோக்கம். ஒரு போக்கிமேன் விளையாட வரும்போது, போனின் திரையில் ஒரு சிவப்பு, வெள்ளை பந்துகள் தோன்றும். ஒரு போக்கிமேனைப் பிடிக்க விளையாடுபவர் தனது விரலால் பந்தை கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அவற்றைப் வசப்படுத்த ஒரு கவர்ச்சிப் பொருளைப் பயன்படுத்தும் போது போக்கிமேன்கள் எளிதாக பிடிபட்டுவிடுகின்றன.
கவர்ச்சியினால் பிடிபடுபவை போக்கிமேன் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல விசுவாசிக்கு தான் எழுதும் புதிய ஏற்பாட்டு மடலில், இயேசுவானவரின் இளைய சகோதரரான யாக்கோபு, “அவனவன் தன்தன் இச்சையினால் இழுக்கப்படுகிறான்” (1:14) என்று நினைவு படுத்துகிறார். வேறு விதமாய்ச் சொல்ல வேண்டுமெனில், நம்மைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும்படி, சோதனையுடன் நமது இச்சைகள் இணைந்து செயல்படுகின்றன. நமது பிரச்சனைகளுக்காக தேவனையோ அல்லது சாத்தானையோ குறை கூற நாம் எத்தனித்தாலும், உண்மையாய் ஆபத்து நமக்குள்தான் இருக்கிறது.
ஆனால், நல்ல செய்தி இருக்கிறது. நம்மைச் சோதனைக்குட்படுத்துகின்ற காரியங்களைக் குறித்து தேவனிடம் பேசுவதன் மூலம் சோதனையின் கவர்ச்சியிலிருந்து நாம் தப்பலாம். மேலும் யாக்கோபு விளக்குகிறார்: “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (1:13). நமது மனித சுபாவம் தவறைச் செய்ய வாஞ்சையாயிருப்பது தேவனுக்குத் தெரியும். தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஞானத்தை நாம் அவரிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் (1:1-6).
தீமை செய்ய நம்மைத் தூண்டும் இச்சையைத் தாண்டிச் செல்ல ஜெபிப்போம்!