சிறுமியாயிருக்கையில், என் வீட்டின் அருகிலிருந்த பரிசுப் பொருட்கள் கடைக்கு எனது தோழியை கூட்டிக்கொண்டு சென்றேன். அவளது செய்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. வண்ணமிக்க சிறு பென்சில்களை அள்ளி எனது பையிள் திணித்த அவள் அவைகளுக்காக பணம் செலுத்தாமல் என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு வாரமாக குற்ற உணர்வு என்னை வாதித்தது. எனது அம்மாவிடம் சென்று கண்ணீரோடு என் தவறை அவரிடம் அறிக்கையிட்டேன்.
எனது தோழி தவறு செய்தபோது அதை எதிர்க்காதற்காக மனம் வருந்திய நான், திருடப்பட்ட பொருட்களை அந்தக் கடையில் கொடுத்து, இனி ஒருபோதும் நான் திருடமாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். தன் கடைக்கு இனிமேல் நான் வரக்கூடாதென கடை உரிமையாளர் கூறினார். ஆனால் எனது அம்மா என்னை மன்னித்துவிட்டபடியாலும், நடந்ததைச் சரிசெய்ய உரியதை நான் செய்துவிட்டேன் என அவர் உறுதிசெய்ததாலும் அன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன்.
இராஜாவாகிய தாவீதும் அறிக்கையிடுவதால் கிடைக்கும் மன்னிப்பை அதிகம் சார்ந்திருந்தான் (சங். 32:1-2). அவனது எலும்புகள் உலர்ந்துபோகுமட்டும் (வச. 3). அவன் பத்சேபாள் மற்றும் உரியாவுக்கெதிரான தனது பாவத்தை மறைத்துவைத்தான் (2 சாமு. 11-12). ஆனால் தாவீது தனது தவறுகளை மறைக்க மறுத்தபோது தேவன் அவனது குற்ற உணர்வை எடுத்துப் போட்டார் (வச. 5). தேவன் அவனை இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சண்யப் பாடல்களால் அவனைச் சூழ்ந்து கொண்டார் (வச. 7). “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” என்பதினால் தாவீது அகமகிழ்ந்தான் (வச. 10).
பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைத் தேடும்போது, நமது பாவங்களுக்கான விளைவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது அல்லது ஜனங்களின் மாறுத்தரங்களை நாம் கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமாக பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் சமாதானத்தையும் நாம் பெற்று மகிழ தேவன் நமக்கு வல்லமை அளிக்கிறார். நமது பாவம் என்றென்றும் மறைந்துபோனதை தேவன் உறுதிப்படுத்துகிறார்.
தேவன் நம்மை மன்னிக்கும் போது, குற்ற உணர்வு ஒழிந்து போகிறது!