கோடை கால முடிவில் இங்கிலாந்தின் நியூ ஃபாரெஸ்ட் பகுதியில் நடந்து சென்றோம். காட்டில் வளர்ந்திருந்த கருப்பு பெர்ரி பழங்களை பிடுங்கிக்கொண்டே பக்கத்தில் துள்ளிக் குதித்த குதிரைகளை ரசித்தவாறு நடந்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பாக மற்றவர்களால் பயிரிடப்பட்ட திரளான இனிய கனிகளை நான் சுவைத்தபோது, இயேசுவானவர் தமது சீஷருக்குச் சொன்ன வார்த்தைகளை நினைத்தேன், “நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன் (யோவா. 4:38).
இவ்வசனங்கள் பிரதிபலிக்கும் தேவ இராஜியத்தின் தாராளத் தன்மையை நான் நேசிக்கிறேன். மற்றவரது கடின உழைப்பின் பலனை நாம் அனுபவிக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார். இது, இரட்சிக்கப்படாத ஒருத்தியின் பெற்றோர் உறவினர் அவளது இரட்சிப்பிற்காய் பல ஆண்டுகள் ஜெபித்திருக்க, நாம் சென்று அவளுடன் இயேசுவின் அன்பைப் பகிர்ந்து அவளை இரட்சிப்பிற்குள்ளாய் நடத்துவதைப் போன்றது. இயேசுவானவரின் வார்த்தைகளில் பொதிந்துள்ள எல்லை கட்டுப்பாட்டையும் நான் நேசிக்கிறேன். நாம் ஒருபோதும் பலனை அனுபவிக்க முடியாதென்றாலும், நாம் விதைகளை விதைக்கலாம், இன்னொருவர் அதை அறுவடை செய்யலாம். ஆனபடியால், பலன்களுக்கு நாம்தான் காரணமென பெருமையாய் நினைக்காமல் நம் முன் உள்ள வேலைகளைச் செய்வதில் நாம் மும்முரமாய் ஈடுபடலாம். தேவனுடைய பணி நம்மை நம்பி நடப்பதன்று. ஒரு மகத்தான அறுவடைக்கான எல்லா ஆதாரங்களையும் தேவன் வைத்திருக்கிறார். அதில் ஒரு பங்காக நாம் மாறுவது நமது பாக்கியமாகும்.
எந்த வயல்கள் அறுவடைக்கு ஆயத்தமாகி உங்கள் முன் இருக்கின்றன? எனக்கு முன் இருக்கின்றன? இயேசுவின் அன்பான அறிவுரையை நாம் கேட்போமாக: “இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்தும் பாருங்கள்” (யோவா. 4:35).
மற்றவர்கள் விதைத்ததை நாம் அறுவடை செய்யக்கூடும்!