எனது சகோதரியின் குடும்பத்தைச் சந்திக்க நான் சென்றிருந்தபோது, எனது அக்கா மகன்கள் தங்களது புதிய வீட்டுவேலை ஒழுங்குமுறையை ஆவலுடன் எனக்குக் காண்பித்தனர். அது ஒரு பிளாஸ்டிக் மின் அட்டை. ஒவ்வொரு வண்ணமிகு எலெக்ட்ரானிக் அட்டையும் அவர்கள் செய்யும் வேலையின் போக்கை கணிக்க உதவுகிறது. ஒரு வேலையை நன்றாகச் செய்தால் அச்சிறுவர்கள் பச்சை நிற பட்டனை அழுத்தலாம். அது அவர்களது “செலவு செய்யும்” அளவை அதிகரிக்கிறது. வீட்டின் பின்புறக் கதவை மூட மறப்பது போன்ற தவறுகளைச் செய்யும்போது மொத்த மதிப்பெண்ணிலிருந்து கழித்துக்கொள்ளப்படும். மிக அதிக மதிப்பெண்கள், கணினி நேரம் போன்ற மனதைக் கவரும் வெகுமானங்களை அளிப்பதாலும் – தவறுகள் மொத்த மதிப்பெண்ணைக் குறைப்பதாலும் – எனது அக்கா மகன்கள் வேலை செய்வதில் வழக்கத்திற்கு அதிகமான ஈடுபாடுள்ளவர்களாகவும், கதவுகளை மூடுவதில் கவனமாகவும் உள்ளனர்!
எனக்கும் இதைப்போன்ற ஊக்கமூட்டும் கருவி ஒன்றிருந்தால் நலமாயிருக்குமென தமாஷாகத் கூறினேன். ஆனால் தேவன் நமக்கு உற்சாகப்படுத்தும் ஊக்கத்தை அளித்திருக்கிறார். வெறும் கீழ்ப்படிதலை மட்டும் எதிர்பார்க்காத இயேசுவானவர், தம்மைப் பின்பற்றுவது கடினமாயிருந்தாலும், பரிபூரணமான ஒரு வாழ்வை நமக்கு வாக்களித்துள்ளார். “ஜீவன்… பரிபூரணப்பட” (யோவா. 10:10). தேவனது இராஜ்யத்தில் வாழ்வை அனுபவிப்பது இப்போதும் மற்றும் நித்தியத்திலும் “நூறு மடங்கு மேலான மதிப்புள்ளது. (மாற். 10:29-30).
ஒரு தாராள மனதுடைய கடவுளை “நாம் சேவிக்கிறோம் என்னும் உண்மையினால் நாம் மகிழக்கூடும். தண்டனைக்குப் பாத்திரரான நம்மை அவர் தண்டிக்கவில்லை. நமது பலவீனமிக்க முயற்சிகளையும் அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுகிறார். முன்பு வந்தவர்களைப் போலவே பிந்தி வந்தவர்களாகிய நம்மைத் தமது இராஜ்யத்திற்குள் வரவேற்று அழைத்துச் சென்று வெகுமதி அளிக்கிறார். இவ்வுண்மையின் வெளிச்சத்தில் இன்று நாம் அவரை மகிழ்வுடன் சேவிப்போமாக.
இயேசுவானவரைப் பின்பற்றுவதுதான் திருப்தியான வாழ்விற்கான ஒரே வழி!