ஆமெரிக்க மாஸ்டர்ஸ் கோல்ஃப் விளையாட்டுப் போட்டி கி.பி. 1934ல் ஆரம்பமானது முதல் மூன்று வீரர்கள் மட்டுமே இரு ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். கி.பி. 2016 ஏப்ரல் 10 அன்று 22 வயதான ஜார்டன் ஸ்பயத் நான்காவதாக இவ்வாறு பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இறுதியான ஒன்பது குழிகளில் தவறு செய்து, இரண்டாவதாக வந்தார். ஏமாற்றமளிக்கும் தோல்வியிலும், சாம்பியன் பட்டம் வென்ற டேனி விலட்டிடம் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட ஸ்பயத், வில்லட்டைப் பாராட்டினார். அவருக்கு முதல் குழந்தை பிறந்தது கோல்ஃப் விளையாட்டைவிட முக்கியமானதெனக் கூறினார்.
இச்சம்பவத்தைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் சஞ்சிகையில் கெரின் கிரவுஸ் எழுதுகையில், “பரிசளிக்கும் விழாவில் பொறுமையாக அமர்ந்து, வேறொருவர் பரிசு பெற்று, புகைப்படங்கள் எடுக்கப்படுவதை கண்டு ரசிப்பதற்கு கிருபை தேவை. ஸ்பயத் ஒரு வாரம் பந்தை சரியாக அடிக்கவில்லை, ஆனாலும் பாதிக்கப்படாத அவரது நற்குணம் மேலோங்கி நின்றது” எனக் குறிப்பிட்டார்.
கொலோசெயிலுள்ள இயேசுவின் சீஷருக்கு பவுல் எழுதும்போது, “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ. 4:5) என வலியுறுத்துகிறார்.
தேவனுடைய கிருபையை இலவசமாகப் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம், வெற்றியோ தோல்வியோ கிருபையை வெளிப்டுத்திக் காண்பிப்பதை நமது சிலாக்கியமாகவும் அழைப்பாகவும் கொள்ள வேண்டும்.
கிருபை நிறைந்த வார்த்தைகள் மட்டுமே எப்போதும் சரியான வார்த்தைகளாம்!