பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறி ஏதும் தோன்றுகிறதாவென்று அறிய, நீச்சல் குளத்தின் நீர்ப்பரப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். நீச்சல் குளத்தில் உயிர்காப்புப் பணியாளராக அன்று, எனது ஆறு மணிநேர முறைமாற்று வேலையிலிருந்த நான், நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்களது பாதுகாவல் குறித்து கண்காணிப்பதற்காக குளத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். நான் நிற்கும் இடத்தைவிட்டு அகன்றாலோ அல்லது சற்று கவனக் குறைவாக இருந்தாலோ நீச்சல்குளத்திலிருப்பவர்களுக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுவிடும். காயத்தினாலோ அல்லது நீச்சல் திறமைக் குறைவினாலோ நீந்துபவர் நீரில் மூழ்கக்கூடிய ஆபத்திலிருந்தால், உடனே அவர்களை குளத்திலிருந்து தூக்கி பாதுகாப்பாக கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எனது பொறுப்பாகும்.
பெலிஸ்தர்களுக்கு எதிரான யுத்தத்தில் (2 சாமு. 21:15-22) தேவன் தாவீதுக்கு உதவி செய்த அனுபவத்தை “ ஆழமான தண்ணீரிலிருந்து” (வச. 22:17) தூக்கி எடுக்கப்பட்ட அனுபவத்தோடு தாவீது ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தாவீதின் வாழ்க்கையும், அவனோடுகூட இருந்த மக்களின் வாழ்க்கையும், அவர்களது சத்துருக்களால் ஏற்பட்ட ஆபத்துக்களால் நிறைந்திருந்தது. அழிவுக்குள் மூழ்கின தாவீதை தேவன் தூக்கி எடுத்தார். உயிர்காப்பாளர்கள் நீந்துபவர்களுக்காக பாதுகாப்பு பணியில் உள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தேவனோ தாவீதின் மேலுள்ள பிரியத்தினால் (வச. 20) அவனைக் காப்பாற்றினார். தேவன் என்னை கண்காணித்து காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தினால் அல்லாமல் என்மேலுள்ள பிரியத்தினால், தேவன் என்னைக் காப்பாற்ற விரும்புவதை நான் உணரும் பொழுது, என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது.
நாம் நமது வாழ்க்கையின் போராட்டங்களினால் நாம் மேற்கொள்ளப்படும்பொழுது, நமது உயிர் காப்பாளரான தேவன் நமது போராட்டங்களை காண்கிறாரென்றும், நம்மேலுள்ள பிரியத்தினால் நம்மைக் கண்காணித்து காப்பாற்றுகிறார் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.
தேவன் அவரது பிள்ளைகளைக் காப்பாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.