இந்த அண்டசராசரம் வியக்கத்தக்க அற்புதமாக உள்ளது. இந்த நேரத்தில்தானே மணிக்கு 2300 மைல் வேகத்தில் சந்திரன் நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது; நமது பூமி மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாகவும், நமது பால் வழியிலுள்ள எண்ணிக்கைக்கு அடங்காத கோள்களில் ஒன்றாகவும் நமது சூரியன் உள்ளது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பால் வெளிகளில் நமது பால் வழியும் ஒன்று. என்ன ஆச்சரியம்!
இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நமது சிறிய பூமி, ஒரு சிறிய கூழாங்கல்லைப் போன்றுள்ளது. நாம், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு மணல் துகளைவிட பெரிதல்ல. ஆனால், வேதாகமத்தின்படி அண்டசராசரங்களின் தேவன் மிகச் சிறியவர்களாகிய நம்மில் ஒவ்வொருவருடைய நுணுக்கமான விபரங்களையும் அறிந்திருக்கிறார். நாம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே அவர் நம்மை அறிந்திருக்கிறார் (சங். 139:13-16). அவர் நமது போக்கையும், வரத்தையும் அறிந்திருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு நினைவையும் அவர் அறிந்திருக்கிறார் (வச. 1-6).
சில சமயங்களில் இது நமக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். இந்தச் சிறிய கூழாங்கல் போன்ற நமது பூமியில் யுத்தம், பஞ்சம் போன்ற மிகப் பெரிய பிரச்சனைகள் உண்டு. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் துன்ப நேரங்களில், நாம் தேவனுடைய கரிசனையோடு கூடிய கண்காணிப்பைப்பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்கலாம். ஆனால், தாவீது ராஜா 139ம் சங்கீதத்தை எழுதிய பொழுது பல் வேறு துன்பங்கள் ஊடாகத் சென்று கொண்டிருந்தான் (வச. 19,20). நமது தலையிலுள்ள முடிகளெல்லாம் தேவனால் எண்ணப்பட்டிருக்கிறது என்று இயேசு கூறிய பொழுது (மத். 10:30) அவர் சிலுவையில் அறையப்பட இருந்த காலக்கட்டத்தில் இருந்தார். தேவனுடைய கரிசனையோடு கூடிய கண்காணிப்பைப்பற்றி வேதம் கூறுவது, ஓர் அனுபவ முதிர்ச்சியற்ற கூற்றல்ல அது உலகிலுள்ள உண்மையான சத்தியமாகும்.
அண்ட சராசரங்களை சுழலவைக்கும் தேவன் நம்மைப்பற்றிய நுணுக்கமான விபரங்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார்.
இப்பிரபஞ்சத்தின் தேவன் மிக நெருக்கமாகவும்,
தனிப்பட்ட முறையிலும் நம்மீது கரிசனை கொள்ளுகிறார்.