எங்கள் பேத்தியின் பள்ளி இசைக்குழு நிகழ்ச்சியைக் கண்டு நாங்கள் வியந்து போனோம். வெறும் 11 மற்றும் 12 வயது நிரம்பிய சிறுபிள்ளைகள் ஒன்றாக இசைந்து, நேர்த்தியாக வாசித்தார்கள். ஒருவேளை அக்குழுவிலிருந்த ஒவ்வொரு பிள்ளையும் தான் தனியாக இசைக்க வேண்டும் என நினைத்திருந்தால், குழுவாக இவர்கள் சாதித்ததை தனி நபராக இவர்களால் அளித்திருக்க முடியாது. புல்லாங்குழல், சாக்ஸபோன்(saxaphone) போன்ற மர வாத்தியங்கள், டிரம்பெட்(Trumpet) போன்ற பித்தளை வாத்தியங்கள், மற்றும் தாள வாத்தியங்கள் அனைத்தும் ‘இசைந்து’ தந்த பங்களிப்பினால் ஓர் அற்புதமான இசை உண்டாயிற்று!
ரோமாபுரியில் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு பவுல் எழுதும்பொழுது, “அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்க[ள்],” எனக் கூறியுள்ளார் (ரோம. 12:5-6). மேலும், தீர்க்கதரிசனம் உரைத்தல், ஊழியம் செய்தல், புத்தி சொல்லுதல், பகிர்ந்தளித்தல், தலைமைத்துவம், இரக்கம் பாராட்டுதல் ஆகிய வரங்களை பவுல் குறிப்பிட்டுள்ளார் (வச 7-8). அதுமட்டுமன்றி, வரங்கள் அனைத்தும், அனைவருடைய பிரயோஜனத்திற்காகவும் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது (1 கொரி. 12:7).
‘இசைந்து’ என்றால் “திட்டம் அல்லது வடிவமைப்பில் ஒருமனதாய் இணைந்து செய்யும் செயல்; நல்லிணக்கம் அல்லது ஒற்றுமை,” ஆகும். இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு தேவன் வைத்துள்ள திட்டம் இதுவே. “சகோதரசிநேகத்திலே, ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” (வச. 1௦). நம்முடைய இலக்கு ஒற்றுமையே; போட்டியன்று.
ஒரு வகையில் பார்த்தால், ஒவ்வொரு நாளும், இவ்வுலகம் நம்மை மிக நுட்பமாக கவனித்து கேட்கும்படியாக ஒரு “மேடையிலே” நாம் இருக்கிறோம். இம்மேடையிலே இருக்கும் தேவனுடைய இசைக்குழுவில், தனி நபர் இசைநிகழ்ச்சி ஏதும் இல்லை. மாறாக ஒவ்வொரு வாத்தியமும் இன்றியமையாதது. ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களோடு இசைந்து பங்களிக்கும்பொழுது, சிறந்த இசை வெளிப்படும்.
தேவனுடைய இசைக்குழுவில் தனி நபர் இசை இல்லை.