என் தோழி, தான் வீட்டிலேயே செய்த சில மண்பாண்டங்களை எனக்கு தபால் மூலம் அனுப்பிவைத்தாள். அப்பார்சலை பிரித்து பார்த்தபோது, அதிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் உடைந்திருக்க கண்டேன். அதில் ஒரு பாத்திரம், பல பெரிய துண்டுகளாகவும், சில்லுகளாகவும், தூசியும் மண்ணும் கலந்த உருண்டைகளாகவும் நொறுங்கிப்போயிருந்தது.
ஆனால், உடைந்துபோன அப்பாத்திரத்தை என் கணவர் பசையிட்டு ஒட்டிய பிறகு, அழகான பாத்திரமாக மாறிற்று. பல விரிசல்களை கொண்ட அவ்வழகிய பாத்திரத்தை, அனைவரும் காணும்படி நான் அலமாரியிலே வைத்தேன். ஒட்டப்பட்ட அப்பாத்திரத்தில் உள்ள விரிசல்களைப் போலவே, பல கடினமான சமயங்களை நான் கடந்து வந்த போது ஏற்பட்ட வடுக்கள், எனக்கும் உண்டு. நான் அச்சூழ்நிலைகளைக் கடந்து வரவும், இன்றும் பலத்தோடு நிற்கவும், தேவனே உதவி செய்தார். துன்ப வேளையில் தேவன் என் வாழ்விலும் என் மூலம் மற்றவர்களுக்கும் செய்த நன்மைகளை நான் பிறரிடம் பகிர்வதின் மூலம், துன்பப்படுகிற அநேகருக்கு நான் ஆறுதலளிக்கும் பாத்திரமாக இருக்க முடியும் என்பதை அப்பாத்திரம் எனக்கு நினைவூட்டியது.
நம்முடைய தேவன் இரக்கமும் ஆறுதலும் அளிப்பவராய் இருப்பதால், “இரக்கங்களின் பிதாவும் சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்,” என அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை போற்றி துதிக்கிறார் (2 கொரி. 1:3). நாம் தேவனைப்போல மாறுவதற்கு, நம்முடைய சோதனைகளையும் பாடுகளையும் ஒரு கருவியாக தேவன் பயன் படுத்துகிறார். நம்முடைய சோதனை வேளையில், தேவன் நமக்களித்த ஆறுதலைக்கொண்டு, உபத்திரவத்தில் இருக்கும் அநேகருக்கு நாம் ஆறுதலளிக்கமுடியும் (வச. 4).
கிறிஸ்துவின் பாடுகளை நாம் எண்ணிப் பார்ப்போமானால், துயரத்தின் மத்தியிலும் நாம் ஆறுதலடைந்து, தேவன்மேல் நம்பிக்கை வைத்து, விடாமுயற்சியுடன் பாடுகளை சகிப்போம். அப்பொழுது தேவன் நம்முடைய அனுபவங்களைக் கொண்டு பாடுகள் மத்தியில் இருக்கும் அநேகருக்கு ஆறுதல் அளிப்பார் (வச 5-7). தேவன் நம்முடைய பாடுகளை எல்லாம் அவருடைய மகிமைக்கென்று மீட்டுக்கொண்டுள்ளார் என்பதை பவுல் அறிந்ததினால் ஆறுதலடைந்தது போல நாமும் ஆறுதலடைவோமாக. தேவன் நமக்களிக்கும் ஆறுதலின் பாத்திரத்தை துயரப்படுகிறவர்களோடு பகிர்ந்து, அவர்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிப்போமாக.
நாம் துயரத்தில் இருக்கையில் தேவன் நமக்கு எவ்வாறு ஆறுதலளித்தார் என்பதை பிறரிடம் பகிரும்போது, தேவன் அவர்களுக்கும் ஆறுதலளிப்பார்.