சில மாதங்களுக்கு முன்பு, “ஊக்கமிக்க மனிதர்கள்” என்னும் சங்கத்திலிருந்து, அச்சங்கத்திலே நான் சேரும்படி, மின்னஞ்சல் மூலம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்பொழுது ‘ஊக்கமிக்க’ என்னும் வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை  நான் அறிந்துகொள்ள முனைந்தபொழுது, ‘ஒரு ஊக்கமிக்க மனிதன், வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்போடு, அதற்கான இலக்குகளை அடைய, விடாமுயற்சியோடு, கடினமாக உழைக்கக்கூடியவன்’ என்பதை நான் அறிந்தேன்.

ஊக்கமிக்க மனிதனாய் இருப்பது நலமானதா? அதை அறிந்துகொள்ள, “புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,” என்னும் வசனத்தின் அடிப்படையில் சோதித்து அறியலாம் (1 கொரி. 1௦:31). ஏனென்றால், அநேகந்தரம், நம்முடைய சுயமகிமைக்கென்றே அநேக காரியங்களை நாம் செய்கிறோம்.

நோவாவின் காலத்தில் உண்டான பெருவெள்ளத்திற்கு பிறகு, “நமக்கு பேர் உண்டாகப்பண்ணுவோம்,” (ஆதி. 11:4) என கூறிக்கொண்டு, மனுஷர் தங்கள் மகிமைக்கென்று ஒரு வானளாவிய கோபுரத்தை கட்ட தீர்மானித்தார்கள். தாங்கள் பூமியெங்கும் சிதறிப் போகாமல் இருக்கவும், புகழ்ச்சியடையவும் விரும்பினார்கள். அவர்கள் தவறான ஊக்கத்தினால் செயல்பட்டார்கள். தேவனுடைய மகிமைக்கென்று அதை செய்யாமல், தங்களுடைய புகழ்ச்சிக்காகவே அதைச் செய்தார்கள்.

அதற்கு எதிர்மாறாக, சாலொமோன் ராஜா, உடன்படிக்கைப் பெட்டியையும் புதிதாக கட்டப்பட்ட தேவாலயத்தையும் பிரதிஷ்டை பண்ணும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்”, என்று கூறினார் (1இரா:8:2௦). மேலும், “நாம் அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும்… கைக்கொள்ளுகிறதற்கு நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாரக”, என வேண்டுதல் செய்தார் (வச:58).

தேவனை மகிமைப்படுத்துவதும், அவருடைய வழிகளில் நடப்பதுமே நம்முடைய பெரிதான வாஞ்சையாய் இருந்தால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு, இயேசுவை நேசிக்கவும் சேவிக்கவும்வல்ல ஊக்கமுள்ள மக்களாக நாம் மாறிவிடுவோம். சாலொமோனின் ஜெபம், நம்முடைய ஜெபமாய் மாறுவதாக. “அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, [நம்] இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது” (வச. 61).