பல வருடங்களுக்கு முன்பு, நானும் என் மகன்களும், எங்கள் மாடியில் படுத்துக்கொண்டு, மேகங்கள் மிதந்து செல்வதை கவனித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது மகன் ஒருவன், “ஏன் மேகங்கள் மிதக்கின்றன”, எனக் கேட்டான். உடனே நான், என் பரந்து விரிந்த ஞானத்திலிருந்து அவன் பயன்பெறும்படி அவனுக்கு பதில் கூற எண்ணி, “அதாவது”, என ஆரம்பித்து, விடை தெரியாததால் மௌனமானேன். பின்பு, “எனக்கு விடை தெரியவில்லை, ஆனால் அதை அறிந்துகொண்டு உனக்கு சொல்கிறேன்”, என மகனிடம் கூறினேன்.
ஏன் மேகங்கள் மிதக்கின்ற என்பதற்கு பதிலை பின்பு அறிந்துகொண்டேன். காற்றுமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் உறைந்துபோய், புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும்பொழுது, அது பூமியின் வெப்பமான தட்பவெப்பநிலையை எதிர்கொண்டு நீராவியாகி, மறுபடியும் காற்றுமண்டலத்திற்குள் கடந்து செல்கிறது. இந்நிகழ்வைக் குறித்த மிகச் சாதாரணமான விளக்கம் இதுவே.
ஆனால் இயற்கையான விளக்கங்கள் ஒருபோதும் இறுதியான பதில்கள் ஆகாது. “மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,”
(யோபு 37:16) நாம் அறிந்துக்கொள்ளும் விதமாக தேவன் தம்முடைய அநாதி ஞானத்தினாலே இயற்கை விதிகளை ஏற்படுத்தியுள்ளார். மேகங்கள் மிதப்பதும் அப்படியே. தேவனுடைய நன்மையையும் கிருபையையும் அவருடைய சிருஷ்டிப்பில் நாம் காணும்படியாக, வெளியரங்கமாகவே வைக்கப்பட்ட அடையாளமாக மேகங்களைக் காணலாம்.
ஆகவே, நீங்கள் மேகங்களைப் பார்த்து ரசிக்கும்பொழுதும், அதில் என்ன உருவம் தெரிகிறது என கற்பனை செய்து பார்க்கும்பொழுதும், எல்லாவற்றையும் நேரத்தியாய் அழகாய் படைத்த தேவன்தாமே, அம்மேகக் கூட்டங்களை காற்றில் மிதக்கச்செய்கிறார் என்பதை நினைவுகூர்ந்திடுங்கள். நாம் அவற்றைக் கண்டு வியந்து, தேவனை அன்புள்ள இருதயத்தோடு பணிந்து தொழவேண்டும் என அவர் விரும்புகிறார். குமுலஸ் (Cumulus) என அழைக்கப்படும் திரளான சின்னஞ்சிறு மேகக்குவியல், ஸ்ட்ராடஸ் (Stratus) என்று அழைக்கப்படும் போர்வை போர்த்தியது போன்று சற்று கருத்த மேகக்கூட்டம் மற்றும் மெலிந்த நாணல் வடிவில் மங்கலாக உள்ள ஸிர்ரஸ் (Cirrus) என்று அழைக்கப்படும் மேகக்கூட்டம் உட்பட வானங்கள் அனைத்தும் தேவனுடைய மகிமையை விவரிக்கிறது.
சிருஷ்டிகரை வெளிப்படுத்தும் அநேக அடையாளங்களினால் அவருடைய சிருஷ்டிப்பு நிறைந்துள்ளது.