என் கரங்களைப் நான் பார்க்கும் பொழுதெல்லாம், என்னுடைய திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிரங்களை நான் தொலைத்துவிட்டது என் ஞாபகத்திற்கு வரும். ஒரு பிரயாணத்திற்கு செல்ல ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, அவைகளை தொலைத்து விட்டேன். எங்கு தேடியும் அவை கிடைக்கவேயில்லை.
என்னுடைய அஜாக்கிரதையான தவறைக்குறித்து என் கணவரிடம் கூற பயந்தேன். ஏனெனில் இச்செய்தி அவரை எவ்வளவாய் பாதிக்கும் என்கிற கவலை உண்டாயிற்று. ஆனால் அவரோ, அம்மோதிரங்களைக் குறித்து கவலைப்படுவதை விடுத்து, மிகுந்த பரிவோடு என்னை தேற்றினார். இச்சம்பவத்தை வைத்து பின்பு ஒருபோதும் அவர் என்னைக் குற்றப்படுத்தாத போதும், அநேகந்தரம், அவருக்காக நான் ஏதாவது ‘செய்து’, என் கணவருடைய தயவை ‘சம்பாதிக்க’ எண்ணினேன்!
அதைப்போலவே அநேகந்தரம், நாம் நம்முடைய பாவங்களை நினைவுகூர்ந்து, தேவனுடைய மன்னிப்பை பெற ஏதாவது ‘செய்ய’ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், நாம் கிரியைகளினால் அல்ல, கிருபையினாலேயே இரட்சிக்கப்பட்டோம் என தேவன் கூறியுள்ளார் (எபே. 2:8-9). தேவன், புதிய உடன்படிக்கையைக் குறித்து பேசும்பொழுது, “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்,” என்று இஸ்ரவேலருக்கு வாக்குப் பண்ணினார் (எரே. 31:34). நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்து, அவற்றை இனி ஒருபோதும் நினைவுகூராத தேவன் நமக்கு உண்டு.
நம்முடைய கடந்த காலத்தை நாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, நமக்கு துக்கமாக இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட விசுவாசத்தின் மூலம், கிருபையாய் நாம் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்னும் தேவ வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசத்தின் மூலம் உறுதியான நம்பிக்கை அடைந்து, தேவனுக்கு நன்றிகளை ஏறெடுப்போமாக. தேவன் பாவங்களை மன்னிக்கிறார், மறக்கிறார்.
கிருபையும் பாவமன்னிப்பும் கிரியைகளினால் உண்டானதல்ல, அவை தேவனுடைய ஈவு.