“மாட்டுவண்டி ஓடின காலகட்டம் முதல் மனிதன் நிலவில் கால் பதித்த காலகட்டத்தையும் நான் கடந்துவந்துள்ளேன். ஆனால் அந்நீண்ட காலக்கட்டம் இவ்வளவு குறுகியதாய் இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை”, என்று தன் பேத்தியிடம் ஒரு முதியவர் கூறினார். அதை அப்பெண் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.

இவ்வாழ்க்கை குறுகியதுதான். ஆகவே நம்மில் அநேகர் என்றென்றும் வாழ விரும்பி இயேசுவண்டை செல்கிறோம். அதில் தவறேதுமில்லை, ஆனால், நித்திய ஜீவனைக் குறித்த உண்மையான புரிதலை நாம் அறிந்துகொள்ள தவறிவிடுகிறோம். நாம் தவறான காரியங்களைக் குறித்து விரும்பி ஏங்குகிறவர்களாகவே காணப்படுகிறோம். நம்மிடம் இருப்பதை விட  மேலானதைக் குறித்து வாஞ்சிக்கிறோம். அது நம் கைகள் எட்டும் துரத்தில்தான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதை அடைந்துவிட ஏங்குகிறோம். உதாரணத்திற்கு, ‘நான் பள்ளிப்படிப்பை முடித்து விட்டால் எவ்வளவு நலமாயிருக்கும்?, ‘எனக்கு அந்த வேலை கிடைத்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்?’, ‘நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றால் எவ்வளவு நலமாயிருக்கும்?, என்று அநேக எதிர்பார்ப்புகள். ஆனால் ஒரு நாள், அம்முதியவரைப் போன்று, ‘காலம் எப்படி இவ்வளவு வேகமாய் கடந்து விட்டது’ என்று அவருடைய வார்த்தைகளை நாமும் எதிரொலிப்போம்.

உண்மை என்னவெனில், இப்பொழுது’ நாம் நித்திய வாழ்வை உடையவர்களாய் இருக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”, என்று கூறுகிறார் (ரோம. 8:2). மேலும், “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக் குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (வச. 5) எனவும் கூறியுள்ளார். அதாவது, கிறிஸ்துவண்டை நாம் வரும்பொழுது, நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் மாறிவிடும். விளைவு, நாம் விரும்புவதை பெற்றுக்கொள்கிறோம். “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும்” (வச. 6).

நாம் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால், ‘வேறொரு’ நபரை திருமணம் செய்து கொண்டு, ‘வேறு’ இடத்தில், ‘வேறு’ நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்பது வாழ்வின் மிகப்பெரிய பொய்களில் ஒன்று. நம்முடைய வாழ்வை, நாம் கிறிஸ்துவுக்குள் காணும்பொழுது, அவ்வாழ்வின் குறுகிய காலக்கட்டத்தையும் அதன் வருத்தங்களையும் குறித்து சிந்திப்பதை விடுத்து, இன்றைக்கும், என்றென்றைக்கும் அவரோடு நாம் முழமையாய் வாழக் கூடிய வாழ்வோடு  நாம் பரிமாற்றிக்கொள்வோமாக.