அநேகந்தரம் நான் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிக்க தேவையான பெலனும் திறனும் முற்றிலும் எனக்கில்லாதது போலவே உணர்வதுண்டு. அது ஞாயிறு வகுப்பை நடத்துவதாக இருந்தாலும் சரி, ஒரு நண்பருக்கு அறிவுரை கூறுவதாக இருந்தாலும் சரி அல்லது இக்கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி. அனைத்தும் என் பெலத்திற்கும் திறனிற்கும் அப்பாற்பட்ட மிகப்பெரிதான சவாலாகவே காணப்படுகின்றன. பேதுருவைப் போல, நான் கற்றுக்கொள்ள வேண்டியது அநேகம்.
இயேசுவை பின்பற்ற முயன்ற பேதுருவுக்கு இருந்த குறைவுகளை புதிய ஏற்பாடு நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறது. இயேசுவை போலவே தண்ணீரில் நடக்க முயன்ற பேதுரு தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான் (மத்.14:25-31). இயேசு சிறைபிடிக்கப்பட்ட பின்பு, அவரை யாரென்று தனக்கு தெரியவே தெரியாது என சத்தியம் செய்தான் (மாற். 14:66-72). ஆனால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை கண்டு பரிசுத்த ஆவியின் வல்லமையை பெற்ற பேதுருவின் வாழ்க்கை மாறியது.
“தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்கு தந்தருளினதுமன்றி,” என்னும் தேவ மகத்துவத்தைக் குறித்து பேதுரு அறிந்துக்கொண்டான் (2 பேது. 1:3). அநேக குறைகளை கொண்டிருந்த ஓர் மனிதனிடமிருந்து எவ்வளவு அற்புதமான ஒரு அறிக்கை!
மேலும், “இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவை களினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 4).
நாம் தேவனை கனப்படுத்தவும், பிறருக்கு உதவிசெய்யவும், அன்றன்றைக்குரிய சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய ஞானத்தையும், பொறுமையையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள ஐக்கியமே ஆதாரமாக உள்ளது. அவர் மூலம் நம்முடைய தாழ்வான உணர்வுகளையும் தயக்கங்களையும் மேற்கொள்ள முடியும்.
எல்லா சூழ்நிலையிலும், நாம் தேவனை சேவிக்கவும் கனப்படுத்தவும் வேண்டிய அனைத்தையும் அவர் நமக்களித்துள்ளார்.
நம்முடைய வாழ்வின் மூலம் அவரை நாம் கனப்படுத்த நமக்கு தேவையான அனைத்தையும் அவர் நமக்களிப்பதாக வாக்குபண்ணியுள்ளார்.