நினைவுகள் செய்யும் ஊழியம்!
இழப்பும், ஏமாற்றமும் நம் வாழ்வில் ஏற்படும்பொழுது, கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் குழப்பத்தை அது நம்மிடம் விட்டுச்செல்கிறது. நம்முடைய தீர்மானங்களினால் சில கதவுகள் அடைபட்டுப்போயிருக்கலாம் அல்லது நம்முடைய தவறேதுமின்றி சூழ்நிலையால் துயரத்தை சந்தித்திருக்கலாம். எதுவாக இருப்பினும், அந்நினைவுகளின் முடிவில் சோகமே மிஞ்சியிருக்கும். “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தினால் உண்டான அளவிடமுடியாத சோகம்” என்று ஆஸ்வல்ட் சேம்பர்ஸ் (Oswald Chambers) அந்த நிலையை அழைக்கின்றார். அப்படிப்பட்ட வேதனையான நினைவுகளை நாம் மறக்க முயன்றும், முடியாமல் தவிக்கிறோம்.
அப்படிப்பட்ட நேரங்களில், தேவன் இன்றைக்கும் நம் வாழ்வில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை சேம்பர்ஸ் நமக்கு நினைவுபடுத்துகிறார். “கடந்தகால நினைவுகளை தேவனே திரும்ப கொண்டுவரும் பொழுது பயப்படாதீர்கள். ஏனெனில் அது தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்து நம்மை கடிந்தும் திருத்தியும், துக்கத்தை ஏற்படுத்தியும் ஊழியம் செய்கிறது. அதன் மூலம் “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தை மாற்றி எதிர்காலத்தை சரியாக எதிர்கொள்ள, அதே இடத்தில்
நல்வளர்ச்சியை காணச்செய்வார். ஆகவே நினைவுகளை அதன் போக்கிலே விட்டுவிடுங்கள்” என்று கூறுகிறார்.
பழைய ஏற்பாட்டின் காலத்தில், இஸ்ரவேல் ஜனம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுச் சென்றபோது மீண்டும் அவர்களை தேவன் தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் வரை, அந்நிய தேசத்தில் அவரை சேவித்து, விசுவாசத்தில் வளரும்படியாக அவர்களிடம் கூறினார். “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே’’ என்று கர்த்தர் கூறினார் (எரே. 29:11).
கடந்த கால சம்பவங்களை எண்ணி தங்களையே வருத்திக்கொள்ளவும் வேண்டாம், அல்லது அதை அசட்டை செய்துவிடவும் வேண்டாம் என்று தேவன் அறிவுறுத்துகிறார். மாறாக, அவர்மேல் நம்பிக்கை வைத்து, முன்னோக்கிச் செல்லச் சொல்கிறார். தேவனுடைய மன்னிப்பு நம்முடைய துக்கமான நினைவுகளை மாற்றி, அவரது நிலையான அன்பில் உறுதியுடன் நிலைத்து நிற்க உதவி செய்கிறது.
ஐந்து நிமிட விதி
தன் பிள்ளைகளிடத்தில் ஐந்து-நிமிட விதியை உபயோகித்து வந்த ஓர் தாயைப் பற்றி நான் புத்தகத்தில் படித்தேன். தன் பிள்ளைகள் தினமும் பள்ளிக்குச் செல்ல தயாரானவுடன் செல்வதற்கு முன், அனைவரும் ஐந்து நிமிடங்கள் ஒன்று கூட வேண்டும் என்பதே அந்த விதி.
அவர்கள் தங்கள் தாயைச் சுற்றி நின்றுகொள்வர். அப்போது அவர் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி, தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள் மேல் அன்று நிலைத்து இருக்கும்படியாக ஜெபிப்பார். பின்னர், முத்தமிட்டு, அவர்களை வழியனுப்பி வைப்பார். சுற்றுப்புறத்திலிருக்கும் பிள்ளைகள் அந்நேரம் அங்கு வந்தால் அவர்களும் ஜெபத்திலே கலந்து கொள்வார்கள். அப்பிள்ளைகளில் ஒருவர், அந்த அனுபவம் ஜெபத்தின் முக்கியத்துவத்தை தனக்கு கற்றுத் தந்ததாக பல வருடங்களுக்குப் பின்னர் பகிர்ந்துகொண்டார்.
102ஆம் சங்கீதத்தை எழுதியவருக்கு ஜெபத்தின் முக்கியத்துவம் நன்கு தெரிந்திருந்தது. “பலவீனம் அடைந்து பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் ஒரு நபர், தேவனிடம் தன் புலம்பல்களை கொட்டும் சங்கீதம்” என்று அதன் தலைப்பு இருகின்றது. “கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்.. நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்” (வச. 1-2) என்று அவர் அழுகின்ற பொழுது, தேவன் “தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்நோக்கமாக” இருக்கிறார் (வச.19).
தேவன் உங்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார், உங்களுடைய குரலைக் கேட்க விரும்புகிறார். நீங்கள் ஐந்து-நிமிட விதியைப் பின்பற்றி ஆசீர்வாதங்களை பெற விரும்பினாலும் சரி அல்லது கொடுந்துயரத்தினால் பல மணிநேரம் தேவனுடைய பாதத்தில் அழுது புலம்பினாலும் சரி, எப்படியோ ஒவ்வொரு நாளும் தேவனிடம் பேசுங்கள். உங்களது செயல், உங்கள் குடும்பத்தினர் மீது அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்.
பிரபஞ்சத்தில் தனிமையாக!
அப்போலோ 15 (Apollo 15) என்னும் விண்வெளிக்கப்பலில் பயணித்த விண்வெளி வீரரான அல் வோர்டன் (Al Worden) சந்திரனிலிருந்து தொலைதூரத்தில் தனியாக வசிக்கும் அனுபவத்தை நன்கு அறிந்தவர். இவர் 1971ஆம் ஆண்டு, விண்கலத்தின் கட்டளை மையமாகிய என்டவோரில் (endeavor), மூன்று நாட்கள் தனியாக இருக்கவேண்டியதாயிற்று. இவருடன் வந்த இரண்டு பேரும் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த சந்திரனின் மேற்பரப்பில் வேலை செய்துகொண்டிருந்தனர். தலைக்கு மேல் தெரிந்த நட்சத்திரங்கள் மாத்திரமே அவருக்குத் துணையாக இருந்தன. நட்சத்திரங்கள் மிகுதியாக இருந்ததால் ஒளிவீசும் போர்வை ஒன்று அவரைச் சுற்றி வளைத்து கொண்டிருந்தது போல இருந்ததாக நினைவுகூருகிறார்.
வீட்டைவிட்டு வந்த யாக்கோபு, சூரியன் அஸ்தமித்து இரவு நேரம் வந்தபொழுது அவனும் தனிமையை உணர்ந்தான். ஆனால் அவன் தனியாக இருந்ததற்கு காரணம் வேறு. முதற்குமாரனுக்குரிய ஆசீர்வாதத்தை தன் மூத்த சகோதரனிடமிருந்து யாக்கோபு தந்திரமாக திருடிக்கொண்டதால், அவன் இவனை கொலை செய்ய நினைத்தான். ஆகவே யாக்கோபு தன் சகோதரனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும்படி வீட்டைவிட்டு ஓடிவந்தான். தனிமையில் யாக்கோபு தூங்க ஆரம்பித்தவுடன், அவனுக்கு ஓர் கனவு வந்தது. கனவில் பரலோகமும் பூமியும் ஓர் படிக்கட்டினால் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அதில் தூதர்கள் ஏறுவதையும், இறங்குவதையும் கண்டபொழுது, தேவனுடைய சத்தத்தை கேட்டான். அவர் அவனோடிருந்து, அவன் பிள்ளைகளின் வாயிலாக முழு உலகையும் ஆசீர்வதிக்கப்போவதாக அவனுக்கு வாக்களித்தார். பின்பு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட யாக்கோபு “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன்” என்று கூறினான் (ஆதி. 28:16).
வஞ்சகம் செய்ததினால் யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான். அவனுடைய தோல்விகளின் மத்தியிலும், இருண்ட இரவின் மத்தியிலும், அவன் தேவனின் பிரசன்னத்தினால் சூழப்பட்டிருந்தான். அவருடைய நோக்கங்கள் நம்முடைய திட்டங்களைவிட மேன்மையானதாகவும் நீண்டகால விளைவு உடையதாகவும் இருக்கின்றது. பரலோகம் நாம் நினைப்பதைவிட மிக அருகில்தான் இருக்கின்றது. “யாகோபின் தேவனும்” நம்மோடுதான் இருக்கின்றார்.
ஒரே ஒரு தொடுதல்
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு தொலைவான பகுதியில் மருத்துவ ஊழியம்செய்யும் வாய்ப்பு வந்தபொழுது கைலீ(Kiley) உற்சாகமடைந்த போதிலும் மருத்துவ அனுபவம் எதுவும் தனக்கில்லையே என்று சற்றே கலக்கமடைந்தாள். ஆனாலும் அடிப்படை மருத்துவ உதவியை அவளால் தரமுடியும் என்பதை எண்ணி தைரியமடைந்தாள்.
அங்கு சென்றபொழுது, மிகவும் கொடுமையான ஓர் வியாதியையுடைய ஒரு பெண்ணை சந்தித்தாள். உருக்குலைந்து அழுகிய நிலையிலிருந்த காலைக் கண்டவுடன் கைலீயிக்கு அருவருப்பாக இருந்தது, ஆனாலும் தான் ஏதாவது செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தாள். ஆகவே அப்பெண்ணின் காலைத் தொட்டு காயங்களை சுத்தப்படுத்தி கட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்ட அப்பெண் அழஆரம்பித்தாள். கவலை அடைந்த கைலீ, தான் வலியை ஏற்படுதிவிட்டேனோ என்று அப்பெண்ணிடம் கேட்டபொழுது, “இல்லை, கடந்த ஒன்பது வருடங்களில் இன்றைக்குத் தான் என்னை ஒருவர் தொட்டிருக்கிறார்” என்று அவள் கூறினாள்.
தொழுநோயும் அப்படிப்பட்ட ஒரு வியாதிதான். அதனால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டாலே மக்கள் முகஞ்சுழிப்பதுண்டு. அந்நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு “அவர்கள் தனித்து வாழவேண்டும். அவர்கள் கூடார முகாம்களுக்கு வெளியேதான் இருக்கவேண்டும்” என்று பண்டைய யூத கலாச்சாரத்தில் பல கடுமையான சட்டங்கள் இருந்தது (லேவி. 13:46).
அதனால்தான் இயேசுவை நோக்கி வந்த குஷ்டரோகி சொன்ன வார்த்தைகள் மிகவும் விசேஷமானது. அவன் “ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்றான் (மத். 8:2). இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: ‘எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு’ என்றார்” (வச. 3).
தனிமையில் வாழ்ந்துவந்த ஓர் பெண்மணியின் வியாதியுற்ற காலைத் தொட்டதினால் ஓரு இணைப்பை ஏற்படுத்தும் இயேசுவின் பயமற்ற அன்பை கைலீ வெளிப்படுத்தத் தொடங்கினாள். ஓர் சிறிய தொடுதல்தான் இவற்றையெல்லாம் செய்தது.