Archives: மே 2017

கண்சிமிட்டி தேவனை எண்ணிப் பார்

என்னுடைய தோழி ரைலி (Ryley) “தேவன் கண் இமையைப் போன்றவர்” என்று கூறியதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் முழித்தேன். அவள் கூறியதின் பொருள் என்ன? 

வேதாகமத்தில் தேவனைக் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள படங்களைக் கடந்த சில நாட்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ஆராய்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு வேதத்தில் தேவனை பிரசவிக்கும் தாயாகவும் (ஏசா. 42:14), தேனீ வளர்ப்பவராகவும் (7:18) காணலாம். ஆனால் என் தோழி கூறியது எனக்கு புதிதாக இருந்தது. ஆகவே அவளைப் பார்த்து, “அதைப்பற்றி மேலும் கூறு”, என்றேன். உடனே உபாகமம் 32ஆம் அதிகாரத்தை அவள் சுட்டிக்காட்டினாள். தன் ஜனத்தை தேவன் பராமரிக்கும் விதத்தை எண்ணி மோசே தேவனை போற்றி துதிப்பதை அவ்வதிகாரத்தில் காணலாம். அவர்களை “தமது கண்மணியைப்போல” தேவன் பாதுகாத்து காத்தருளினார் என்று 10ம் வசனம் விவரிக்கிறது. 

கண்மணியைச் சூழ்ந்து பாதுகாப்பது எது? கண் இமை தானே! ஆம், தேவன் கண் இமையை போன்றவர். மென்மையான கண்களை பாதுகாப்பதையே தன் இயற்கையான பண்பாக கொண்ட கண்ணிமையை போன்றவர் நம் தேவன். கண்ணிமைகள் அபாயத்திலிருந்து கண்களை பாதுகாப்பது மட்டுமன்றி நாம் கண் சிமிட்டும்பொழுது, அழுக்கையும் தூசியையும் வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை உட்புகாமல் பாதுகாக்கிறது, கண்கள் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இறுதியாக கண்களை மூடி இளைப்பாற உதவி செய்கிறது. 

தேவனை கண்ணிமையாக சித்தரித்துப் பார்த்தபொழுது, அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர் நமக்களித்த அநேக உருவகங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தினேன். இரவிலே கண்களை மூடி காலையில் விழிக்கும்பொழுது, தேவனுடைய மென்மையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் எண்ணி அவரை போற்றித் துதிப்போமாக.

தேவனைக் காணும் விதம்

பொது இடங்களில், கேலிச்சித்திர ஓவிய கலைஞர்கள் சுமாரான விலையாவது கொடுத்து வாங்கக் கூடிய மக்களிடம் அவர்களுடைய உருவத்தை நகைச்சுவையான வடிவில் வரைந்து தருவார்கள். நம்முடைய தோற்றத்தின் ஏதாவது ஒரு அம்சத்தை சற்று மிகைப்படுத்தி, ஆனால் அதே சமயம் நாம் நம்மை அடையாளம் காணும் விதத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் நம்மை மகிழ்விக்கும். 

ஆனால் தேவனைக் குறித்த கேலிச்சித்திரங்கள் வேடிக்கைக்குரியதல்ல. ஏனெனில், அவருடைய ஏதாவது ஒரு பண்பை மிகைப்படுத்தி காட்டும்பொழுது திரிக்கப்பட்ட அக்கண்ணோட்டத்தை எளிதாக மக்கள் ஒதுக்கி விடுவார்கள். ஒரு கேலிச்சித்திரத்திற்கு நாம் எப்படி அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ அதேபோலவே, தேவனைக்குறித்து மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்திற்கும் நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேவனை கோபாக்கினை நிறைந்த இரக்கமற்ற நியாயதிபதியாகவே காணும் மக்கள், அவருடைய இரக்கங்களையே வலியுறுத்தும் ஒருவரால் எளிதாக கவரப்படுவார்கள். தேவனைக் கனிவான உள்ளம் கொண்ட தாத்தாவாக காணும் இவர்களோ, நீதியை சரிகட்டும் நியாயாதிபதியாகவும் தேவனைக் காண மறுத்துவிடுவார்கள். இன்னொரு பக்கம், தேவனை அன்பு நிறைந்த, ஜீவனுள்ள நபராகச் காணாமல், அறிவார்த்தமான கருத்தாகவோ, எண்ணமாகவோ காணும் சிலர் அவர்களை வசீகரிக்கக்கூடிய வேறு கருத்துகளினால் இழுக்கப்பட்டு இறுதியில் விலகிச்சென்று விடுவார்கள். தேவனை உற்ற நண்பராக கருதும் வேறு சிலர், தங்கள் விருப்பத்திற்கேற்ற நண்பர்களைக் கண்டடைந்தால், தேவனை அநேகமாய் மறந்து விட்டுவிடுவார்கள். 

தம்மை இரக்கமும் கிருபையும் நிறைந்தவராக மாத்திரமல்லாமல் நீதியை விசாரிக்கிறவராகவே தேவன் வெளிப்படுத்துகிறார் (யாத். 34:6-7). 

நாம் நம்முடைய விசுவாசத்தை செயல்படுத்த முனையும்பொழுது, தேவனை பிடித்தமான பண்புகளை மாத்திரமே உடையவராக சித்தரிப்பதை நாம் தவிர்த்துவிட வேண்டும்.

வெளிவர வழியைக் கண்டுபிடித்தல்!

கலிபோர்னியாவிலுள்ள சாண்டா பார்பரா (Santa Barbara) என்னும் ஊரில் “சால்ஸிபுடெஸ்” (Salsipuedes) என்னும் விசித்திர பெயர் கொண்ட ஒரு தெரு உண்டு. அதன் அர்த்தம் “முடிந்தால் சென்று விடுங்கள்,” என்பதே. அப்பகுதியை ஒட்டி சதுப்பு நிலம் இருந்ததால் சில சமயம் வெள்ள அபாயம் ஏற்படுவதுண்டு. ஆகவே அப்பட்டணத்தை திட்டமிட்டு கட்டிய ஸ்பானிஷ் மொழி பேசும் நபர்கள் மக்களை எச்சரிக்கும் விதமாக வெளிப்படையாக அப்படியொரு பெயரை அத்தெருவிற்கு சூட்டினார்கள். 

“அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே, அதை விட்டு விலகிக் கடந்துபோ”, என்று பாவமும் சோதனைகளும் நிறைந்த “தவறான பாதையை” விட்டு விலகி இருக்குமாறு தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது (நீதி. 4:15). ஆனால் “உங்களால் முடிந்தால் அவ்வழியில் செல்லாதே” என வேதம் கூறவில்லை. மாறாக, “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட, அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்,” என வேதம் நமக்கு நம்பிக்கையளித்து தேவனையே நோக்கச் செய்கிறது (1 கொரி. 10:13). 

நம்முடைய திராணிக்கு மேலாக தேவன் ஒருபோதும் நம்மைச் சோதிக்க மாட்டார் என்கிற வாக்குத்தத்தம் நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நாம் சோதனையை எதிர் கொள்ளும்பொழுது தேவனையே நோக்கினால் நாம் அச்சோதனையின்று தப்பிக்கொள்ளும்படி உதவிட ஆவலாய் இருக்கிறார்.

“நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்(கூடிய) பிரதான ஆசாரியர் நமக்கு(உண்டு)”, என்று இயேசுவைக் குறித்து வேதம் உறுதியளிக்கிறது (எபி. 4:15). அவர் “எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருப்பதனால் எல்லா சோதனையினின்றும் தப்பித்துக்கொள்ளும் வழியை அவர் அறிவார். ஆகவே அவரிடம் நாம் செல்லும்பொழுது தப்பிச்செல்ல வழியைக் காண்பித்தருளுவார்!

பிள்ளையை ஆயத்தப்படுத்து!

“கடந்து செல்ல வேண்டிய பாதைக்கு ஏற்றவாறு பிள்ளையை ஆயத்தப்படுத்து, பாதையை அல்ல” என்னும் சொற்றொடரை அநேக குழந்தைவளர்ப்பு வலைத்தளங்களில் காணலாம். நம்முடைய பிள்ளைகள் செல்லும் பாதையில் உள்ள தடைகளை எல்லாம் நாம் அகற்றிவிட முனைவதைக்காட்டிலும் அப்பாதையில் உள்ள சிரமங்களை எல்லாம் அவர்கள் தைரியத்தோடு எதிர்கொண்டு முன்னேறிச்செல்ல அவர்களை நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். 

“பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர்... வேதத்தை ஸ்தாபித்து, அவைகளை தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்... பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு... தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படி...” என சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 78:4-6). “தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கு,” (வச. 7) அவர்களை ஆயத்தப்படுத்துவதே அதன் நோக்கம். 

பிறர் தங்களுடைய சொல்லாலும் செயலாலும் நம்மீது ஏற்படுத்திய வல்லமையான ஆவிக்குரிய தாக்கத்தை எண்ணிப்பாருங்கள். அவர்களுடைய உரையாடல்களும் செயல்களும் நம்முடைய கவனத்தை ஈர்த்து, கிறிஸ்துவை அவர்கள் பின்பற்றுவது போலவே நாமும் அவரை பின்பற்றும்படி நம்முடைய இருதயங்களை கொளுந்துவிட்டு எரியச்செய்தன. தேவனுடைய வார்த்தையையும் அவருடைய திட்டங்களையும் அடுத்த தலைமுறையினரோடு பகிர்ந்துகொள்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியமும் கடமையுமாகும். அதன் மூலம் நாம் அநேக தலைமுறைகளை சந்திக்கக்கூடும். அவர்களுடைய வாழ்வில் அவர்கள் செல்லப்போகும் பாதையில் உள்ள அனைத்தையும் தேவ பெலத்தோடு அவர்கள் எதிர்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தி பெலப்படுத்த வேண்டும்.