என்னுடைய தந்தை அதிகமாகப் பேசமாட்டார். இராணுவத்தில் வேலை செய்ததினால் அவருக்கு காது சரியாக கேட்காமல், காதுகேட்கும் கருவியை உபயோகித்து வந்தார். ஓர் மத்தியான வேளையில், நானும் எனது தாயாரும் அளவுக்கதிகமாய் பேசிவிட்டது போல் உணர்ந்த அவர், விளையாட்டாய் “எப்போதெல்லாம் எனக்கு அமைதியும் சமாதானமும் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒரே ஒரு காரியத்தை நான் செய்தால் போதும்” என்று சொல்லி இரண்டு கைகளையும் உயர்த்தி, அவரது காதில் இருந்த கேட்கும் கருவிகளை எடுத்துவிட்டு, கைகளை தன் தலையின் பின்னால் கட்டிக்கொண்டு, கண்களை மூடி அமைதியாக புன்னகைத்தார்.
நாங்கள் சிரித்தோம். அவரைப் பொறுத்தமட்டில் கலந்துரையாடல் முடிவடைந்துவிட்டது!
எனது தந்தையின் செய்கைகள் தேவனுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசத்தை நன்றாக உணர்த்தியது. தேவன் எப்போதும் தமது பிள்ளைகளின் குரலை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார். வேதத்தில் இருக்கும் மிகச் சிறிய ஜெபமே இதற்கு உதாரணமாகும். பெர்சியா ராஜாவாகிய அர்தசஷ்டாவின் ஊழியக்காரனான நெகேமியா, ராஜாவின் சந்நிதானத்தில் ஒரு நாள் கவலையுடன் காணப்பட்டான். ஏன் என்று கேட்ட ராஜாவிடம், தனது முன்னோர்களின் பட்டணமாகிய எருசலேம் பாழடைந்து கிடப்பதை குறித்த கவலையை பயத்துடன் எடுத்துரைத்தான் – “அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: ‘நீ கேட்கின்ற காரியம் என்ன என்றார்’. அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி; ராஜாவைப் பார்த்து……” (நெகே. 2:4–5).
நெகேமியாவின் ஜெபம் நொடிப்பொழுதில் முடிவடைந்துவிட்டது. ஆனால் தேவன் அதை கேட்டார். எருசலேமை குறித்து நெகேமியா ஏற்கனவே ஜெபித்துவிட்டார். அவர் செய்த அனைத்து ஜெபங்களுக்கும் தேவன் வைத்திருந்த இரக்கமுள்ள பதிலை அந்த சிறிய ஜெபம் பெற்றுத்தர ஆரம்பித்தது. அந்த தருணத்தில், பட்டணத்தை சீரமைக்க வேண்டும் என்ற நெகேமியாவின் விண்ணப்பத்திற்கு அர்தசஷ்டா உடனடியாக பதில் கொடுத்தார்.
மிகச் சிறிய ஜெபத்திலிருந்து மிக நீளமான ஜெபம் வரை – நம்முடைய எல்லா ஜெபத்தினையும் தேவன் கரிசனையுடன் கேட்கின்றார் என்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாய் இருகின்றதல்லவா?
மிகச் சிறிய குரலைக் கூட கேட்டக்கூடியவர்தான் நம்முடைய மிகப்பெரிய தேவன்.