நான் 12 வயதாய் இருந்த பொழுது பாலைவனப் பகுதியில் உள்ள ஒரு நகரத்திற்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. புதிய பள்ளியில், அனல் காற்றடிக்க உடற்பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நாங்கள் அனைவரும் குடிநீர்க் குழாய்க்கு நேராய் விரைந்து ஓடுவோம். என் வகுப்பு பிள்ளைகளோடு ஒப்பிடும்பொழுது நான் அவர்களைவிடச் சிறியவனாகவும் மெலிந்தும் இருப்பதினால், வரிசையில் நிற்கும்பொழுது அநேகந்தரம் பிறர் என்னைத் தள்ளி விட்டு முன்சென்று விடுவார்கள். ஒருநாள், தன் வயதிற்கு மிஞ்சிய உடற் கட்டும் பெலனும் கொண்ட என் நண்பன் ஜோஸ் (Jose) இதைக் கண்டு, என் அருகில் வந்து தன் பலத்த கரத்தை விரித்து ஒருவனும் என்னை வந்து தள்ளாதபடி எனக்கு அரணாய் நின்றுகொண்டு, “ஏய், முதலில் பாங்க்ஸ் (Banks) தண்ணீர் குடிக்க வழிவிடுங்கள்”, என உரத்த சத்தமிட்டான். அன்றைய தினத்திற்கு பிறகு ஒரு நாளும் தண்ணீர் குடிக்க எனக்கு பிரச்சனை ஏற்பட்டதே இல்லை.
பிறர் நம்மை ஈவிரக்கமின்றி நடத்தும்பொழுது நாம் படும் வேதனையை இயேசு நன்கு அறிவார். ஏனெனில் நம் எல்லோரைக் காட்டிலும் மிக அதிகமாக அதை எதிர்கொண்டவர் அவரே. “அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்…,” என அவரைக்குறித்து வேதம் கூறுகிறது (ஏசா. 53:3). ஆனால் அவர் பாடுகளினால் பாதிக்கப்பட்ட வராய் மாத்திரம் இருந்துவிடாமல், இன்று நமக்காக பரிந்துபேசி வழக்காடுபவராகவும் இருக்கிறார். நாம் தேவனோடு ஒரு புதிய ஐக்கியத்திற்குள் பிரவேசிக்கும்படியாய், அவர் தமது ஜீவனையே நமக்காக தந்தருளி “புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை” நமக்கு உண்டு பண்ணியுள்ளார் (எபி 10:19). நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாதபடியினால், அவர் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவத்திலிருந்து மனந்திரும்பினால், இலவசமாய் அவர் நமக்களித்துள்ள ஈவாகிய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கக்கூடிய உற்ற நண்பர் இயேசு ஒருவரே. அவர், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”, எனக் கூறியுள்ளார் (யோவா. 6:37). மற்றவர்கள் நம்மை எப்பொழுதும் ஓரடி தூரத்திலேயே வைக்கலாம் அல்லது முழுவதும் ஒதுக்கியே விடலாம், ஆனால் சிலுவையில் நமக்காக தன் கரங்களை விரித்த தேவன் இன்றும்கூட நம்மை அழைக்கிறார். நம்முடைய இரட்சகர் எவ்வளவு வல்லமையானவர்!
தேவன் விலைமதிக்கமுடியாத விலைக்கிரயமாக தம் ஜீவனை செலுத்தி இரட்சிப்பு என்னும் ஈவை நமக்களித்துள்ளார்.