என் மனைவி கரோலினுடன் (Carolyn) லண்டன் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, காட்லிமேன் தெரு(Godliman Street) என்ற ஓர் சாலையைக் கண்டேன். அங்கு வசித்த ஓர் புனிதரின் வாழ்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதை “புனிதர் வாழும் சாலை (கோட்லிமேன் தெரு)” என்று பெயரிட்டதாக தெரிவித்தனர். இது பழைய ஏற்பாட்டில் நடந்த ஓர் சம்பவத்தை நினைவூட்டியது.
சவுலின் தகப்பனார் காணாமற்போன கழுதைகளைக் கண்டுபிடித்து வருமாறு சவுலைத் தன் பணியாளனோடு அனுப்பினார். பல நாட்கள் தேடிய பின்பும் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
களைத்துப்போன சவுலும் வீட்டிற்குத் திரும்ப எண்ணினான். ஆனால் அவனுடன் இருந்த பணியாளனோ சாமுவேல் தீர்க்கதரிசி வசிக்கும் ராமாவை சுட்டிக்காட்டி “இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒருவேளை அவர் நாம் போக வேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்” (1 சாமு. 9:6).
சாமுவேல் தனது வாழ்நாள் முழுவதும் தேவனுடைய நட்பையும் ஐக்கியத்தையும் நாடி வந்தான். அதனால் அவனது வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியத்தினால் நிறைந்திருந்தது. அவன் தேவனுடைய தீர்க்கதரிசியென்று மக்களறிந்திருந்தனர். ஆகவே சவுலும் அவனது ஊழியக் காரனும் “தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்” (வச.10).
இயேசுவைப் பிரதிபலிக்கும் வாழ்வை நாம் வாழ்ந்தால், நாம் வாழும் பகுதியில், நம்மைக் குறித்ததான தெய்வபக்தியின் நினைவுகளை முத்திரையாக விட்டுச் செல்லலாம்.
பரிசுத்தமான ஒரு வாழ்வே மிகவும் வல்லமையான சாட்சி!