அன்பும், பழைய காலணிகளும்
சில சமயங்களில் நானும், என்னுடைய மனைவியும் ஒருவர் மற்றொருவருடைய வாக்கியங்களை நிறைவு செய்வோம். எங்களுடைய 30 வருட திருமண வாழ்வில் ஒருவர் மற்றவர் எண்ணுவதையும், பேச நினைப்பதையும் அதிகதிகமாய் அறிந்து வைத்துள்ளோம். சொல்லப் போனால் சில சமயங்களில் ஒரு வாக்கியத்தை முடிக்கக்கூட தேவையில்லை; ஒரே வார்த்தை அல்லது சிறு பார்வை கூட போதும், எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த.
நமக்கு மிகவும் சவுகரியமாக இருப்பதினால் நம்முடைய பழைய காலணிகளை தொடர்ந்து உபயோகிப்பது போல, இதிலும் ஒரு சவுகரியம் உண்டு. சில சமயங்களில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “என் பழைய செருப்பே” என ஆசையாய்க் கூறிக்கொள்வோம். ஆனால் எங்களை நன்கு அறியாதவர்கள் இதைக்கேட்டால் ஒன்றும் புரியாமல் திகைப்பார்கள்! அநேக ஆண்டுகளைக் கடந்து வந்த எங்களுடைய உறவு அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளைக் கொண்ட ஒரு மொழியை தனக்கென உருவாக்கிக்கொண்டுள்ளது.
நம்மை ஆழ்ந்து அறிந்தவராய் தேவன் நம்மை நேசிக்கிறார் என்னும் வெளிப்பாடு நமக்கு ஆறுதல் அளிக்கிறது. “என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்,” என தாவீது எழுதியுள்ளான் (சங். 139:4). இயேசுவோடு கூட அமர்ந்து உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலுள்ள காரியங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்த நீங்கள் திணறும் பொழுது, அதை அறிந்தவராய் புன்னகை புரிந்து நீங்கள் கூற நினைத்ததை அப்படியே அவர் வெளிப்படுத்துவார். தேவனோடு உரையாட நாம் ஏற்ற வார்த்தைகளை கூற வேண்டிய அவசியமில்லை என்பது நமக்கு எவ்வளவு நிம்மதியளிக்கக்கூடிய விஷயம்! அவர் நம்மை நேசிப்பதுமட்டுமின்றி நம்மை முழுவதுமாக அறிந்தும் வைத்திருக்கிறார்.
இரண்டு புகைப்படங்கள்
ஆலய நுழைவாயிலில் இரண்டு புகைப்படங்களை இறுகப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி, அவற்றைப் பெருமையுடன் தன் நண்பர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாள். முதலாவது புகைப்படம் அவளது தாய்நாடாகிய புருன்டியில் (Burundi) எடுக்கப்பட்ட அவளுடைய மகளின் படம். இரண்டாவது புகைப்படம் அம்மகளுக்கு பிறந்த அவளது மகனின் புகைப்படம். ஆனால் அப்புகைப்படத்தில் மகள் இல்லை. ஏனெனில், அவனை பிரசவிக்கும் பொழுது அவள் இறந்துவிட்டாள்.
அப்பொழுது அங்கு வந்த அவளுடைய தோழி அப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டு உடனே அம்மூதாட்டியின் முகத்தை அன்பாய் தன் கரங்களில் ஏந்தி கண்ணீரோடு, “எனக்குத் தெரியும். எனக்கு தெரியும்,” எனக் கூறினாள்.
அவளுக்குத் தெரியும்தான். ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மகனை அவள் அடக்கம் செய்தாள்.
நம்முடைய வலி வேதனைகளை தானும் அனுபவித்தவர்கள் கூறும் ஆறுதல் விசேஷமானது. ஏனெனில் அவர்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். இயேசு கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, தன் சீஷர்களைப் பார்த்து, “நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்,” என்று கூறினார்: ஆனால் அவ்வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், “நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்,” என்னும் ஆறுதலான வார்த்தைகளையும் கூறினார் (யோவா. 16:20). இன்னும் சில மணி நேரங்களில், இயேசுவின் கைதும், சிலுவை மரணமும் அவருடைய சீஷர்களை நிலைகுலையச் செய்யும். ஆனால் தாங்கொண்ணா துயரத்தில் மூழ்கியிருந்த அவர்கள் இயேசுவை உயிரோடு கண்டவுடன் எதிர்பாராத மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மேசியாவைக் குறித்து, “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார் (ஏசா. 53:4). நம்முடைய இரட்சகர் நம்முடைய
வலி, வேதனைகளை அறிந்தவர் மட்டுமன்று அவைகளை அனுபவித்தவரும் கூட. அவர் எல்லாவற்றையும் அறிவார். அவரே நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். ஒரு நாள் நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.
நம்மில் ஒருவர்!
நமக்கு மிகவும் பிடித்தமான பீனட்ஸ் (Peanuts) என்னும் காமிக் தொடரின் படைப்பாளருமான சார்ல்ஸ் ஷல்ஸின் (Charles Schulz 1922-2000) நினைவுநாள் ஆராதனையில் அவருடைய நண்பரும் நகைச்சுவை சித்திரப்படைப்பாளருமான கேத்தி கைஸ்வைட் (Cathy Guisewite) அவருடைய இரக்க குணத்தையும், மனிதநேயத்தையும் பற்றிப் பேசினார். “நாம் அனைவரும் ஒருபோதும் தனிமையாக உணராதபடி இவ்வுலகத்திலுள்ள அனைவருடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் பல கதாபாத்திரங்களை படைத்தார். நாங்கள் ஒருபோதும் தனிமையாக உணராதபடி தன்னையே எங்களுக்கு தந்தருளினார். எங்களுக்கு பரிவுகாட்டி எங்களை உற்சாகப்படுத்தினார். எங்களில் ஒருவராகவே அவரைக் கருதும்படி உணரச்செய்தார்” எனக் கூறினார்.
நம்மை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லையே அல்லது நமக்கு ஒருவராலும் உதவி செய்ய முடியாதே என நாம் நினைக்கலாம். ஆனால் தம்மையே நமக்காகக் கொடுத்த இயேசு, நம்மை முற்றிலும் அறிந்தவராயும், இன்றைய தினம் நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அறிந்தவராயும் இருக்கிறார்.
எபிரேயர் 2:9-18 வசனங்கள் இயேசு இப்பூமியிலே வாழ்ந்த பொழுது மனித சாயலை முற்றிலும் தரித்தவராய் வாழ்ந்தார் (வச. 14) என்னும் ஒப்பற்ற அதிசயத்தக்க சத்தியத்தை எடுத்துரைக்கிறது. அவர் “ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி (பார்த்தார்)” (வச. 9), பிசாசின் வல்லமையை அழித்தார் (வச. 14), “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலையாக்கினார்”(வச. 15). இயேசு “இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்து (வச. 17).
எனது எல்லாவற்றையும்!
இளம் ஐசக் வாட்ஸ் (Issac Watts) தன்னுடைய சபையின் பாடல்கள் நிறைவற்றதாக இருப்பதை எண்ணி வருந்தினான். அப்பொழுது அவனுடைய தகப்பன் சிறப்பான பாடல்களை உண்டாக்குமாறு அவனுக்கு அன்பாக ஆணையிட்டார். அப்படியே ஐசக் செய்தான். “என் அருள் நாதா இயேசுவே” (When I survey the wondrous cross) என்னும் அவருடைய பாடல் ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அப்பாடல் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அப்பாடலின் ஆராதனை ததும்பும் மூன்றாவது சரணம் கிறிஸ்துவின் சிலுவைக் காட்சிக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கிறது.
கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே!
உலக வரலாற்றின் மிக மோசமான தருணமாகிய சிலுவைக் காட்சியை வாட்ஸ் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். அன்று அச்சிலுவையின் அருகே நின்றிருந்தவர்களோடு நாமும் சற்று நேரம் சிலுவையின் அருகே செல்வோமாக. தம்முடைய சரீரத்தில் சொரசொரப்பான பெரிய ஆணிகள் பாய்ந்து, சிலுவையில் அறையப்பட்டிருந்த தேவகுமாரனாகிய இயேசு மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சில மணிநேர சித்திரவதைகளுக்குப் பின்பு, அவ்விடமெங்கிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இருள் சூழ்ந்தது. அண்டசராசரங்களின் தேவனாகிய கர்த்தர் இறுதியாக கடும் வேதனை அடைந்து, தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது அவ்விடமெங்கிலும் நிலநடுக்கத்தின் ஆரவார சத்தம் ஒலித்தது. அதேவேளை பட்டணத்திலுள்ள ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கல்லறைகள் திறந்து, அதிலிருந்த மரித்தோர் உயிர்பெற்று பட்டணத்திலே உலாவினார்கள் (மத். 27:51-53). இச்சம்பவங்களை எல்லாம் கண்ட அதிபதி “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்!” என ஒப்புக்கொண்டான் (வச. 54).