புத்துணர்வளிக்கும் வசந்தகால மழை
சற்று இடைவெளி தேவைப்பட்டதால், பக்கத்தில் இருந்த பூங்காவில் நடக்கச் சென்றேன். ஓர் பாதையில் நடந்து கொண்டிருந்தபொழுது, பச்சை நிறம் அதிகமாய் என் கண்களில் தென்பட்டது. ஜீவனை எடுத்துரைக்கும் விதத்தில் பூமியிலிருந்து துளிர்த்த சில செடிகள் என் கவனத்தை ஈர்த்தது. இன்னும் சில வாரங்களில் அவை பூத்துக்குலங்கும் டாஃபோடில்களாக (Daffodil) வளர்ந்து விடும். நாம் மற்றொரு குளிர்காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்பதையும், வரப்போகும் வசந்த காலத்தையும் அவை பறைசாற்றுகின்றன.
ஓசியாவின் புத்தகத்தைப் படிக்கும்போது, ஜீவனற்ற, வறண்ட குளிர்காலத்தைப் போல அநேக பகுதிகளில் உணருவோம். ஏனெனில் தேவன் அந்த தீர்க்கதரிசிக்கு யாரையும் பொறாமைக்குள் ஆழ்த்தாத ஓர் வேலையைத் தந்தார். நேர்மையற்ற, துரோகம் செய்யும் ஒரு பெண்ணை மணந்துகொள்ளுமாறு தேவன் கூறினார். அதன் வாயிலாக தாம் படைத்த தமது ஜனமாகிய இஸ்ரவேலின் மீது தமக்கிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்த விரும்பினார் (1:2-3). ஓசியாவின் மனைவியாகிய, கோமேர், திருமண வாக்குறுதியை மீறினாள், அவற்றை உடைத்தெறிந்தாள். அவள் தன்னை அர்ப்பணிப்புடன் நேசித்து வாழ்வாள் என்ற விசுவாசத்தினால் ஓசியா அவளை திரும்பவும் அழைத்துக் கொண்டான். அதைப் போலவே தேவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பும், மூடுபனியைப் போல கலைந்து போய் விடாமல், வல்லமையோடும், அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.
நமக்கும், தேவனுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கின்றது? கொண்டாட்டங்களின் பொழுது அவரை அலட்சியம் செய்து விட்டு பிரச்சனையின் பொழுதும், துயரத்தில் இருக்கும் பொழுதும் மாத்திரம் அவரைத் தேடுகிறோமா? இஸ்ரவேலர்களை போல நாமும் பரபரப்பு, வெற்றி மற்றும் செல்வாக்கு என்னும் விக்கிரகங்களினால் ஆட்டிவைக்கப்படுகிறோமா?
இன்றைக்கு மீண்டும் ஒரு முறை தேவனிடத்தில் நம்மை அர்ப்பணித்துக்கொள்ளலாம். வசந்த காலத்தில் துளிர்க்கும் அந்த சிறிய பூக்களை போல் தேவனும் நம்மை மறந்துவிடாமல், நம்மீது அளவில்லாத அன்பினை வைத்துள்ளார்.
ஓட்டமும் ஓய்வும்
‘ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஓய்வு நாட்கள் அதிமுக்கியமானது,” என்னும் செய்தித் தலைப்பு என் கண்ணில் பட்டதும் மனதில் பதிந்தது. அமெரிக்க மலை ஓட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரான டாமி மானிங் (Tommy Manning) தன் கட்டுரையில், ஒருவர் தன் பயிற்சிக்குப் பின் சரீரம் இளைப்பாறி, பிறகு மீண்டும் கட்டப்படுவதற்கு தேவையான ஓய்வு நேரத்தை அதற்கு அளிக்க வேண்டும் என்கிற நெறிமுறையை வலியுறுத்தி உள்ளார். ஏனெனில் மிகுந்த அர்ப்பணிப்போடு பயிற்சி மேற்கொள்ளும் அநேக விளையாட்டு வீரர்கள் இந்நெறிமுறையை அசட்டை செய்துவிடுகின்றனர். “உடல்ரீதியாக, பயிற்சியின் விளைவாக ஏற்படும் மாற்றங்கள், இளைப்பாறும்பொழுதுதான் நிறைவேறுகிறது. அதாவது பயிற்சியைப் போன்றே இளைபாறுதலும் மிக முக்கியமானது” என மானிங் தன்னுடைய கட்டுரையில் எழுதியுள்ளார். இது நம்முடைய விசுவாச ஜீவியத்திற்கும் பொருந்தும். நாம் பெலவீனப்பட்டுப் போகமாலும், சோர்ந்து போகாமலும் இருப்பதற்கு நேரம் தவறாமல் ஓய்வெடுப்பது அத்தியாவசியமானது. மிகப் பெரிய தேவைகளை எதிர்கொண்ட பொழுதும் கூட, இப்பூமியில் வாழ்ந்த நாள் முழுவதும் இயேசு ஓர் ஆவிக்குரிய சமநிலையை நாடினார். அவருடைய சீஷர்கள் பரபரப்பாக போதித்து, அநேகரை சுகமாக்கி திரும்பிய பொழுது “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று கூறினார் (மாற். 6:31). ஆனால் ஒரு பெரிய கூட்டம் அவர்களை பின்தொடர்ந்து சென்றதால், இயேசு அவர்களுக்கு போதித்து, பின்பு ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு உணவு வழங்கினார் (வச. 32-44). எல்லோரும் சென்ற பிறகு, அவர் “ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்” (வச. 46).
ஒரு வேளை நம்முடைய வாழ்க்கை, நாம் செய்யும் வேலையினால் வரையறுக்கப்பட்டிருந்தால், நாம் செய்யும் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பயனற்று போகும். ஆகவே தான் நாம் நேரம் தவறாமல் தொடர்ந்து இயேசுவோடு கூட அமைதியான இடத்திலே இளைப்பாறவும், ஜெபிக்கவும் நம்மை அழைக்கிறார்.
ஒரு சிறிய நெருப்பு
அது செப்டம்பர் மாதத்தின் ஓர் ஞாயிற்றுக்கிழமை இரவு. அநேகர் உறங்கிக்கொண்டிருந்த பொழுது, புட்டிங் தெருவிலுள்ள (Puding Lane) தாமஸ் ஃபாரினர் (Thomas Forriner) பேக்கரியில் சிறிய நெருப்பு பற்றியது. ஆனால் சீக்கிரத்தில் ஒவ்வொரு வீடாய் தீப்பற்றி முழு லண்டன் மாநகரமும் நெருப்பில் மூழ்கியது. 1666ஆம் ஆண்டின் மகா பெரிய நெருப்பில், எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.
அத்தீ அப்பட்டணத்தின் ஐந்தில் நான்கு பங்கு பகுதியை அழித்துப்போட்டது. ஒரு சிறிய நெருப்பிலிருந்து எவ்வளவு பெரிய அழிவு!
இதைப்போலவே பலத்த அழிவை உண்டாக்கக்கூடிய வேறு ஒரு சிறிய நெருப்பைக் குறித்து வேதம் நம்மை எச்சரிக்கிறது. “அப்படியே, நாவானதும் சிறிய அவயமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக். 3:5) என யாக்கோபு எழுதிய பொழுது, கட்டிடங்களை எண்ணி இதை அவர் எழுதவில்லை, மாறாக நம்முடைய வாழ்க்கையையும், உறவுகளையும் மனதில் வைத்தே இதை எழுதினார்.
ஆனால் நம்முடைய வார்த்தைகள் பிறரை எழுப்பி கட்டுகிறதாகவும் இருக்கலாம். “இனிய சொற்கள்
தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும் எலும்புகளுக்கு ஓளஷதமும்” என நீதிமொழிகள் 16:24 நமக்கு நினைப்பூட்டுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும் “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” எனக் கூறுகிறார் (கொலோ. 4:6). உப்பானது நம்முடைய உணவிற்கு சுவையூட்டுவது போல, கிருபையான வார்த்தைகள் பிறரை பெலப்டுத்தி எழுப்பிக் கட்டுகிறது.
துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூறவும், விசுவாசத்தில் வளர விரும்புகிறவர்களை உற்சாகப் படுத்தவும் அல்லது இரட்சகரண்டை வரவேண்டியவர்களை வழிநடத்தவும் ஏற்ற வார்த்தைகளை நாம் உபயோகிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.