சற்று இடைவெளி தேவைப்பட்டதால், பக்கத்தில் இருந்த பூங்காவில் நடக்கச் சென்றேன். ஓர் பாதையில் நடந்து கொண்டிருந்தபொழுது, பச்சை நிறம் அதிகமாய் என் கண்களில் தென்பட்டது. ஜீவனை எடுத்துரைக்கும் விதத்தில் பூமியிலிருந்து துளிர்த்த சில செடிகள் என் கவனத்தை ஈர்த்தது. இன்னும் சில வாரங்களில் அவை பூத்துக்குலங்கும் டாஃபோடில்களாக (Daffodil) வளர்ந்து விடும். நாம் மற்றொரு குளிர்காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்பதையும், வரப்போகும் வசந்த காலத்தையும் அவை பறைசாற்றுகின்றன.
ஓசியாவின் புத்தகத்தைப் படிக்கும்போது, ஜீவனற்ற, வறண்ட குளிர்காலத்தைப் போல அநேக பகுதிகளில் உணருவோம். ஏனெனில் தேவன் அந்த தீர்க்கதரிசிக்கு யாரையும் பொறாமைக்குள் ஆழ்த்தாத ஓர் வேலையைத் தந்தார். நேர்மையற்ற, துரோகம் செய்யும் ஒரு பெண்ணை மணந்துகொள்ளுமாறு தேவன் கூறினார். அதன் வாயிலாக தாம் படைத்த தமது ஜனமாகிய இஸ்ரவேலின் மீது தமக்கிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்த விரும்பினார் (1:2-3). ஓசியாவின் மனைவியாகிய, கோமேர், திருமண வாக்குறுதியை மீறினாள், அவற்றை உடைத்தெறிந்தாள். அவள் தன்னை அர்ப்பணிப்புடன் நேசித்து வாழ்வாள் என்ற விசுவாசத்தினால் ஓசியா அவளை திரும்பவும் அழைத்துக் கொண்டான். அதைப் போலவே தேவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பும், மூடுபனியைப் போல கலைந்து போய் விடாமல், வல்லமையோடும், அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.
நமக்கும், தேவனுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கின்றது? கொண்டாட்டங்களின் பொழுது அவரை அலட்சியம் செய்து விட்டு பிரச்சனையின் பொழுதும், துயரத்தில் இருக்கும் பொழுதும் மாத்திரம் அவரைத் தேடுகிறோமா? இஸ்ரவேலர்களை போல நாமும் பரபரப்பு, வெற்றி மற்றும் செல்வாக்கு என்னும் விக்கிரகங்களினால் ஆட்டிவைக்கப்படுகிறோமா?
இன்றைக்கு மீண்டும் ஒரு முறை தேவனிடத்தில் நம்மை அர்ப்பணித்துக்கொள்ளலாம். வசந்த காலத்தில் துளிர்க்கும் அந்த சிறிய பூக்களை போல் தேவனும் நம்மை மறந்துவிடாமல், நம்மீது அளவில்லாத அன்பினை வைத்துள்ளார்.
நாம் தேவனிடத்தில் உண்மையற்றவராக இருப்பினும், அவர் நம்மை விட்டு விலகிச் செல்ல மாட்டார்.