சமீபத்தில் விடுமுறையின் பொழுது, என்னுடைய சவரக்கத்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு தாடி வளர்க்க ஆரம்பித்தேன். அம்மாற்றத்தை குறித்து என்னுடைய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் அநேக கருத்துக்களை தெரிவித்தார்கள்; அதில் பாராட்டுகளே அதிகம். இருப்பினும் ஒரு நாள் கண்ணாடியில் தாடியுடன் கூடிய என் முகத்தை பார்த்துவிட்டு, “இது நான் அல்ல” என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே சவரக்கத்தியை வெளியே எடுக்க வேண்டியதாயிற்று.
நாம் யார் என்றும், ஏன் நமக்கு சில காரியங்கள் நம்முடைய குணாதிசயத்திற்கு பொருந்துவதில்லை என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். முதலாவதாக, தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தந்துள்ளார். ஆகவே நாம் அனைவரும் ஒரே பொழுதுபோக்கை உடையவர்களாக இல்லாமல், ஒரே உணவு வகையை சாப்பிடாமல், ஒரே சபையில் தேவனை ஆராதிக்காமல் இருப்பதில் தவறேதுமில்லை. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்,” உண்டாக்கப்பட்டிருக்கிறோம் (சங். 139:14). நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்கும்பொருட்டு தனித்தன்மை வாய்ந்த ஈவுகளை தேவன் நம் அனைவருக்கும அளித்துள்ளார் என பேதுரு குறிப்பிடுகிறார் (1 பேது. 4:10-11).
இயேசுவின் சீஷர்கள் அவருடைய உலகத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, அதின் வாசலில் நின்று அவரவர் குணாதிசயங்கள் ஏற்றனவாக உள்ளதா என எண்ணிப் பார்க்கவில்லை. ஏனெனில் இயேசு கைது செய்யப்பட்ட அந்த இரவு, உணர்ச்சி வசப்பட்ட பேதுரு போர்ச்சேவகரின் காதை வெட்டிவிட்டான். தோமாவோ கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை விசுவாசிக்க தனக்கு ஆதாரம் வேண்டுமென்று வலியுறுத்தினான். இவர்கள், தங்கள் உள்ளான மனிதனில் கொஞ்சம் வளர வேண்டும் என்பதற்காக, இயேசு இவர்களை நிராகரிக்கவில்லை. மாறாக தன்னுடைய பணிக்கு ஏற்றவாறு அவர்களை வனைந்து உருவாக்கினார்.
நாம் தேவனுக்கு எவ்வாறு செவ்வையாக சேவை செய்ய முடியும் என பகுத்தறிய முயலும் பொழுது, சில சமயங்களில், நம்முடைய தாலந்துகளையும், குணாதிசயங்களையும் எண்ணிப் பார்த்து, “இது நான் அல்ல” என்று கூறுவோமானால் நலமாயிருக்கும். ஏனெனில் சில சமயங்களில் நமக்கு சவுகரியமாக தோன்றுகிறதையெல்லாம் விட்டு வரும்படி தேவன் நம்மை அழைக்கலாம். அவ்வாறு அழைப்பது, நம்முடைய தனிப்பட்ட தாலந்துகளையும், குணநலன்களையும் மெருகேற்றி அவருடைய நன்மையான நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கே. நாம் இருக்கும் வண்ணமாகவே நம்மை பயன்படுத்தும்படி அவருக்கு அனுமதி கொடுக்கும் பொழுது, அவருடைய படைப்பாற்றலை நாம் கனப்படுத்துகிறோம்.
நாம் அனைவரும் தனித்துவம் உள்ளவர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறோம் - சாதாரண நபர் ஒருவரும் இல்லை.