இது நம்மை பொறாமை கொள்ள வைக்கும் ஒரு மரம். ஆற்றோரத்திலே வளர்வதால், வானிலை அறிக்கைகளைப்பற்றியோ, வறண்ட தட்பவெப்ப நிலையைப்பற்றியோ, நிலையற்ற எதிர்காலத்தைப் பற்றியோ அது கவலைப்படத் தேவையில்லை. ஆற்றோரத்திலிருந்து தேவையான தண்ணீரையும், போஷாக்கையும் பெறுவதால் சூரியனை நோக்கி தன் கிளைகளை விரித்து உயரே வளர்ந்தும் நன்று வேர்விட்டு பூமியை இறுக பிடித்தும் தன்னுடைய இலைகளினால் காற்றைச் சுத்தம் செய்தும் வெயிலின் உஷ்ணத்தினால் தவிக்கும் அநேகருக்கு நிழல் தந்து இளைப்பாறுதல் அளிக்கிறது.
இதற்கு எதிர்மறையாக, தீர்க்கதரிசி எரேமியா ஒரு செடியை சுட்டிக் காட்டுகிறார் (எரே. 17:6). மழையில்லாமல் சுட்டெரிக்கும் வெயிலினால் பூமி வறண்டு அவ்வறட்சியினால் அச்செடி துவண்டு, இலை உதிர்ந்து கனி கொடுக்காமலும் ஒருவனுக்கும் நிழல் தர முடியாமலும் காணப்படுகிறது.
எரேமியா தீர்க்கதரிசி ஒரு செழிப்பான மரத்தோடு, வறண்டு போன ஒரு செடியை ஏன் ஒப்பிட்டார்? தன் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனதிலிருந்து அற்புதவிதமாக மீட்கப்பட்ட நாள் முதல் அவர்களுக்கு நடந்த எல்லாவற்றையும் அவர்கள் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும் என விரும்பினார். நாற்பது வருடங்கள் வனாந்திரத்திலே இருந்தபொழுதும், அவர்கள் ஆற்றோரத்திலே வளர்ந்த மரம் போல செழித்திருந்தார்கள் (2:4-6). இருப்பினும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே காணப்பட்ட செழிப்பினால் அவர்களுடைய முந்தய நாட்களை மறந்து போனார்கள். தங்கள் சுயத்தின் மீதும் தங்களுக்கென்று அவர்களே ஏற்படுத்தின தேவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து (வச. 7-8) உதவியை நாடி எகிப்திற்கே திரும்பிச் செல்லதுணிந்தார்கள் (42:14).
ஆகவே, எரேமியாவின் மூலம் தன்னை மறந்துபோன இஸ்ரவேல் ஜனங்களை அன்பாய் உணர்த்துவது போல, நாமும் தேவன் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைத்து அவ்வறண்ட செடிபோல் இல்லாமல் அச்செழிப்பான மரம்போல இருக்கும்படி நம்மையும் உணர்த்துகிறார்.
துன்ப வேளையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை செழிப்பின் நாட்களில் நினைவுகூருவோமாக.