புதிதாய் பிறந்த பூனைக்குட்டிகளிடமிருந்து விரைந்தோடிய நான்கு வயது எலியாசை (Elias) அம்மா கவனித்தார். பூனைக்குட்டிகளைத் தொடக்கூடாது என்று ஏற்கனவே அவனுக்கு சொல்லி இருந்தார். ஆனால் எலியாஸ் ஓடியதைப் பார்த்து, “நீ அந்த பூனைக்குட்டிகளைத் தொட்டாயா?” என்று கேட்டார்.
“இல்லை!” என நல்லபிள்ளை போல் கூறினான். ஆகவே வேறு விதமாக ஒரு கேள்வி கேட்டார்கள். “அவை மென்மையாக இருந்தனவா?” அதற்கு அவன் “ஆமாம்” என கூறியது மட்டுமின்றி “அந்த கருப்பு பூனைக்குட்டி ‘மியாவ்’ என கத்தியது,” என்றும் கூறினான்.
குழந்தைகள் ஏமாற்றும் பொழுது நாம் சிரிக்கிறோம். ஆனால் எலியாசின் கீழ்ப்படியாமை மனித குலத்தின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்கு வயது சிறுவனுக்கு ஒருவரும் பொய் சொல்ல கற்றுத்தர வேண்டியதில்லை. “நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்,” என தாவீது தன்னுடைய புகழ்பெற்ற பாவ அறிக்கையில் எழுதியுள்ளான் (சங். 51:5).
அப்போஸ்தலனாகிய பவுல், “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணமும் எல்லாருக்கும் வந்தது” எனக் கூறியுள்ளார் (ரோம. 5:12). வருத்தமளிக்கும் இச்செய்தி இராஜாக்களுக்கும், நான்கு வயது சிறுவர்களுக்கும், உங்களுக்கும், எனக்கும் சமமாய் பொருந்தும். ஆனால் சோர்ந்து போக வேண்டாம். மிகுந்த நம்பிக்கையளிக்கும் செய்தியும் உண்டு. மனுஷனுடைய பாவ சுபாவம் வெளிப்படும்படியாய் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. “மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று,” என பவுல் எழுதியுள்ளார் (ரோம. 5:20).
நாம் தவறு செய்தவுடன் நம் மீது பாய்ந்து வந்து நம்மைத் தண்டிக்க தேவன் காத்திருக்கவில்லை. நமக்கு கிருபை பாராட்டி, நம்மை மன்னித்து, சீர்ப்படுத்துவதே அவருடைய நோக்கம். நாம் செய்ய வேண்டியதென்னவெனில் பாவத்தை அசட்டைபண்ணாமலும், அதை விரும்பாமலும் விசுவாசத்தோடு அவரிடத்தில் மனந்திரும்பக்கடவோம்.
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோமர் 8:1