அன்டாரியோ (Ontario)வில் உள்ள வெல்லான்ட் (Welland) நகரில் திடீரென பிங்க் நிறத்தில் “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்ற வார்த்தைகளை கொண்ட விளம்பரப் பலகைகள் மர்மமாக தோன்றின. ஆகவே உள்ளூர் நிருபரான மரியானா ஃபிர்த் (Maryanne Firth) அதைப்பற்றி விசாரிக்கத் தீர்மானித்தாள். ஆனால் அவளுடைய விசாரணையில் ஒன்றும் அகப்படவில்லை. சில வாரங்கள் கழித்து ஒரு உள்ளூர் பூங்காவின் பெயரும், தேதியும், நேரமும் குறிப்பிடப்பட்ட பல விளம்பரப்பலகைகள் மறுபடியும் மர்மமாகத் தோன்றின.
ஆவலான சில உள்ளூர்வாசிகளோடு, மரியானா குறிப்பிட்ட நேரத்திற்கு அப்பூங்காவிற்கு சென்றாள். அங்கு நல்ல உடை அணிந்து, சாமர்த்தியமாக தன் முகத்தை மறைத்திருந்த ஒருவனைக் கண்டாள். அவன் நெருங்கி வந்து அவளுக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்ட பொழுது அவளுக்கு எவ்வளவு வியப்பாக இருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள். அந்த மர்ம மனிதன், அவளுடைய காதலன் ரயன் செயன்ட் டெனிஸ் (Ryan St. Denis). ஆகவே அந்த திருமணக் கோரிக்கையை அவள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள்.
டெனிஸ் தன்னுடைய வருங்கால மனைவியிடம் தன் காதலை வெளிப்படுத்திய விதம் கொஞ்சம் பகட்டாகத் தோன்றலாம். ஆனால் தேவன் நம் மீது வைத்துள்ள அன்பை அவர் வெளிக்காட்டிய விதம் நிகரற்ற ஆடம்பரமானது. “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவா. 4:9). அன்பிற்கு அடையாளமாக ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கும் ஒரு ரோஜாப்பூவைப் போல் இயேசு ஒரு அடையாளச் சின்னம் அல்ல.
இரட்சிப்பு அடையும்படி தன்னை விசுவாசிக்கிற அனைவரும் தேவனோடு கூட நித்திய உடன்படிக்கையினாலுண்டான உறவில் ஐக்கியம் கொள்ள தேவமனுஷனாகிய அவர் தாமாகவே தம் ஜீவனைத் தந்தருளினார். கிறிஸ்தவனை “கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு” எதுவும் பிரிக்க முடியாது (ரோம. 8:39).
தேவன் எவ்வளவாய் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் இரட்சிக்கும்படி தம்முடைய குமாரனையே அவர் அனுப்பினார்.