என்னுடைய இளைய மகள், மியூனிச் (Munich) நகரத்திலிருந்து பார்ஸலோனாவுக்கு பயணித்த அன்று, எனக்கு மிகவும் பிடித்தமான விமானக் கண்காணிப்பு வலைத்தளத்தில் அவள் சென்று கொண்டிருந்த விமானத்தின் வழித்தடத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நான் அவள் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் எண்ணைப் பதிவு செய்தவுடன், அவ்விமானம் ஆஸ்திரியா தேசத்தை கடந்து, இத்தாலிய தேசத்தின் வடக்கு பகுதியை கடந்து கொண்டிருந்ததை கணினி திரையில் காணமுடிந்தது. அங்கிருந்து அது பிரான்ஸ் நாட்டின் தெற்கே மத்தியதரைக் கடல் பகுதியை கடந்து, குறித்த நேரத்தில் ஸ்பெயின் நாட்டை வந்தடையும். விமானப் பணிப் பெண்கள் மதிய உணவிற்கு என்ன வழங்க இருக்கிறார்கள் என்பதை மாத்திரமே நான் அறியாதது போல் உணர்ந்தேன்!
என்னுடைய மகள் இருக்கும் இடத்தை குறித்தும், சூழ்நிலையைக் குறித்தும் நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏனெனில் நான் அவளை நேசிக்கிறேன். அவள் மீதும், அவள் செய்கைகள் மீதும், அவளுடைய வாழ்க்கைப் பயணத்தின் மீதும் எனக்கு அக்கறை உண்டு.
சங்கீதம் 32ல் தாவீது தேவனுடைய அற்புதமான மன்னிப்பையும், வழிநடத்துதலையும், அக்கறையையும் குறித்து ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறான். இப்பூமிக்குரிய தகப்பனைப் போல் அல்லாமல் நம்முடைய வாழ்வை முற்றிலும் அறிந்தவராய், நம்முடைய இருதயத்தில் புதைந்திருக்கும் தேவைகளையும் அறிந்தவராய் இருக்கிறார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (வச. 8) என்று தேவன் நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார்.
இன்று நம்முடைய சூழ்நிலை எதுவாக இருப்பினும், தேவனுடைய பிரசன்னத்தின் மீதும், அவருடைய அரவணைப்பின் மீதும் நாம் நம்பிக்கை கொள்ளலாம். ஏனெனில், “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்” (வச. 10).
தேவனுடைய அன்பும், அவருடைய பார்வையும் எப்பொழுதும் நம் மீது உள்ளது.