தேவனுடைய முகம்
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
2 கொரிந்தியர் 4:6
ஒரு எழுத்தாளராக என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் வலியின் வேதனையை சுற்றியே இருந்துள்ளன. பல நாட்களாகியும் ஆறாத புண்ணை நகத்தால் சுரண்ட நினைப்பது போல, மறுபடியும் மறுபடியும் நான் அதே கேள்விகளுக்கு திரும்புவேன். என்னுடைய புத்தகங்களை படிக்கும் வாசகர்கள் அவர்களுடைய கடுந்துயரமான கதையை பகிர்ந்து கொள்ளும்பொழுது, அவர்களுடைய முகங்கள் என் சந்தேகங்களுக்கு உருவம் கொடுத்துவிடும். வாலிபர் மத்தியில் ஊழியம் செய்யும் போதகர், எய்ட்ஸ் (AIDS) நோயினால் பாதிக்கப்பட்டவருடைய இரத்தத்தை சரியாக பரிசோதிக்காமல் தன் மனைவிக்கும், குழந்தைக்கும் செலுத்தியதால் மரணத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து, “இனி ஒரு ‘அன்பான தேவனைக்’ குறித்து என் வாலிபர் குழுவிடம் நான் எப்படி பேச முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இப்படிப் பட்டதான ‘ஏன்’ என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிகூட செய்யக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன். மாசுள்ள அந்த இரத்தம் எதற்காக அப்போதகரின் மனைவிக்கு செலுத்தப்பட வேண்டும்? ஏன் ஒரு சுழற்காற்று ஒரு ஊரை தாக்கிவிட்டு இன்னொரு ஊரை தாக்காமல் செல்கிறது? ஏன் சரீர சுகத்திற்காக ஏறெடுக்கப்படும் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைப்பதில்லை?
இப்படி அநேக கேள்விகள் இருப்பினும், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்ற கேள்வி மாத்திரம் இனி ஒருபோதும் என்னை குடைவதில்லை. ஏனென்றால் வலியின் வேதனைகளினால் இப்பூமி குமுறும்பொழுது தேவனுடைய மன வேதனையை அவருடைய முகத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆம், தேவன் நமக்கு காட்டிய அவருடைய முகம், இயேசுவினுடைய முகமே.
தேவனுடைய குமாரனாகிய இயேசு நமக்காக மரணத்தை ருசித்ததினால் வலி, வேதனைகள், துன்பங்கள் மற்றும் மரணமும் நித்தியத்திற்கும் இறுதியாக அழிக்கப் பட்டதினால், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்கிற கேள்விக்கு பதில் கிடைத்தாயிற்று. “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரி. 4:6).
அனைத்தையும் துறந்து
நான் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய பொழுது, ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் மனப்பூர்வமாய் ஒரு தீர்மானம் செய்தேன். அதாவது, உடற் பயிற்சிக் கூடத்திற்கு செல்லும்பொழுது, முற்றிலுமாக என்னை என் பயிற்சியாளரிடம் அர்ப்பணித்து, அவர் செய்யக் கட்டளையிடும் அனைத்தையும் செய்து முடிக்க தீர்மானித்தேன்.
அதற்கு மாறாக, “பயிற்சியாளரே! நான் வந்துவிட்டேன். நான் கூடையில் பந்து வீச விரும்புகிறேன், பந்தை லேசாக தட்டியபடி நகர்த்த விரும்புகிறேன். ஓட்டப் பயிற்சியோ, பந்தை தடுக்கும் பயிற்சியோ செய்து வேர்த்து விறுவிறுத்து போகவோ விரும்பவில்லை!” என நான் கூறினால், அது எவ்விதத்திலும் என் அணிக்கு பயனளிக்காது.
வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு விளையாட்டு வீரனும் தன்னுடைய அணியின் நலனைக் கருதி, பயிற்சியாளர் மேல் நம்பிக்கை வைத்து அவர் செய்யச் சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள், நாம் தேவனுக்கு உகந்த “ஜீவபலியாக” மாறவேண்டும் (ரோம. 12:1). நாம் நம்முடைய இரட்சகராகிய ஆண்டவரை நோக்கி, “உம்மை நான் நம்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீரோ, அதற்கு நான் சித்தமாயிருக்கிறேன்,” என கூற வேண்டும். அப்பொழுது அவர் நம்முடைய மனங்களை புதிதாக்கி, அவருக்கு பிரியமான காரியங்களில் நோக்கமாய் இருக்கச் செய்து, நம்மை “மறுரூபமாக்குகிறார்.”
ஒரு காரியத்திற்கு தேவையான பயிற்சியை அளித்து நம்மை ஆயத்தப்படுத்தாமல், அக்காரியத்தை செய்யும்படி ஒருபோதும் தேவன் நம்மை அழைப்பதில்லை என்பது நமக்கு ஆறுதலளிக்கும். இதைக்குறித்து பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே...” (வச. 6) எனக் கூறியுள்ளார்.
நம்மை சிருஷ்டித்த தேவன், அவருக்குள் நாம் கிரியை செய்யும்படி நமக்கு உதவி செய்வதினால், அவருக்கென்று நம்மை முற்றிலும் வெறுமையாக்கி, அவரை நம்பி நம் வாழ்வை அவருடைய கைகளில் ஒப்புக்கொடுப்போமாக.
ஜீவசுவாசம்
கடுமையான குளிரும், உறைபனியும் கொண்ட ஒரு காலை வேளையிலே நானும், என் மகளும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் சுவாசம் நீராவியாக மாறுவதைக் கண்டு, இருவரும் விதவிதமான நீராவி மேகங்களை உருவாக்கி, சிரித்து கொண்டிருந்தோம். நான் உயிரோடிருக்கவும், என் மகளோடு குதூகலமாக நேரத்தை செலவிடவும் கிடைத்த அத்தருணத்தை ஈவாக கருதி கொண்டாடுகிறேன்.
பொதுவாக கண்ணுக்குப் புலப்படாத நம்முடைய சுவாசம், அன்று அந்த குளிர்ந்த காற்றினிலே காண முடிந்தது. அது நம் ஜீவ சுவாசத்தின் ஊற்றாகிய நமது சிருஷ்டி கர்த்தரை நினைவுகூரச்செய்தது. ஏனெனில், பூமியின் மண்ணினாலே உருவாக்கப்பட்ட ஆதாமிற்கு ஜீவசுவாசத்தை அளித்தவர், நமக்கும், இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனை அளித்துள்ளார் (ஆதி. 2:7). நாம் சுவாசிக்கும் பொழுது, நாம் எண்ணிப்பார்க்காத சுவாசக்காற்று உட்பட அனைத்தும் அவரிடமிருந்தே வந்துள்ளது.
நம்முடைய ஆரம்பத்தையும், தேவனே நமக்கு ஜீவனை அளித்தவர் என்பதையும் நாம் மறந்து போகும்படி இன்றைக்கு நாம் அனுபவித்து கொண்டிருக்கும் சவுகரியங்களையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு நாம் சோதிக்கப்படலாம். ஆனால் தேவனே நம்முடைய சிருஷ்டி கர்த்தர் என்பதை நிதானித்து நினைவுகூரும் பொழுது, நம்முடைய அன்றாட வாழ்வில் நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ளலாம். அவருடைய உதவியை நாடி ஈவாக பெற்றுக்கொண்ட இவ்வாழ்வை எண்ணி தாழ்மையோடு உள்ளத்தின் ஆழத்தினின்று நன்றி கூறலாம். நம்முடைய நன்றியுணர்வு நம்மிலிருந்து வழிந்து மற்றவர்களையும் தொட்டு, அதன் மூலம் தேவனுடைய நன்மையையும், உண்மையையும் எண்ணி அவர்களும் நன்றிகூரட்டும்.
பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம்
1974ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீன விவசாயிகள் கிணறு வெட்டிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சரியமானதொன்றை கண்டுபிடித்தார்கள். அவர்களுடைய வறண்ட நிலத்திற்கடியில், கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த ஆளுயர டெரக்கோட்டா (Terracotta) சிலைகள் புதைந்திருந்தன. மத்திய சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆபூர்வமான கண்டுபிடிப்பில் 8000 வீரர்களும், 150 குதிரைப் படையும், 520 குதிரைகளைக் கொண்ட 130 ரதங்களும் இருந்தன. இன்று சீனாவின் மிக முக்கியமான சுற்றுலா ஸ்தலமாக இந்த டெரக்கோட்டா படை மாறிவிட்டது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதைக் காண வருகின்றனர். அநேக நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த இவ்வியப்பளிக்கும் பொக்கிஷம், இன்று உலகத்தோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
அப்போஸ்தலனாகிய பவுல், இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம், கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது என எழுதி உள்ளார். “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரி. 4:7). கிறிஸ்துவையும், அவருடைய அன்பையும் குறித்த செய்தியே நமக்குள் இருக்கும் பொக்கிஷம்.
இது மறைத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் அல்ல. தேவனுடைய அன்பினாலும், கிருபையினாலும் உலகத்திலுள்ள எல்லா தேசத்தின் மக்களும் அவருடைய குடும்பத்திற்குள் வந்து சேர இதை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆவியானவரின் துணையோடு இன்று இப்பொக்கிஷத்தை நாம் எவரிடமாவது பகிர்ந்து கொள்வோமாக.