நான் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய பொழுது, ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் மனப்பூர்வமாய் ஒரு தீர்மானம் செய்தேன். அதாவது, உடற் பயிற்சிக் கூடத்திற்கு செல்லும்பொழுது, முற்றிலுமாக என்னை என் பயிற்சியாளரிடம் அர்ப்பணித்து, அவர் செய்யக் கட்டளையிடும் அனைத்தையும் செய்து முடிக்க தீர்மானித்தேன்.
அதற்கு மாறாக, “பயிற்சியாளரே! நான் வந்துவிட்டேன். நான் கூடையில் பந்து வீச விரும்புகிறேன், பந்தை லேசாக தட்டியபடி நகர்த்த விரும்புகிறேன். ஓட்டப் பயிற்சியோ, பந்தை தடுக்கும் பயிற்சியோ செய்து வேர்த்து விறுவிறுத்து போகவோ விரும்பவில்லை!” என நான் கூறினால், அது எவ்விதத்திலும் என் அணிக்கு பயனளிக்காது.
வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு விளையாட்டு வீரனும் தன்னுடைய அணியின் நலனைக் கருதி, பயிற்சியாளர் மேல் நம்பிக்கை வைத்து அவர் செய்யச் சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள், நாம் தேவனுக்கு உகந்த “ஜீவபலியாக” மாறவேண்டும் (ரோம. 12:1). நாம் நம்முடைய இரட்சகராகிய ஆண்டவரை நோக்கி, “உம்மை நான் நம்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீரோ, அதற்கு நான் சித்தமாயிருக்கிறேன்,” என கூற வேண்டும். அப்பொழுது அவர் நம்முடைய மனங்களை புதிதாக்கி, அவருக்கு பிரியமான காரியங்களில் நோக்கமாய் இருக்கச் செய்து, நம்மை “மறுரூபமாக்குகிறார்.”
ஒரு காரியத்திற்கு தேவையான பயிற்சியை அளித்து நம்மை ஆயத்தப்படுத்தாமல், அக்காரியத்தை செய்யும்படி ஒருபோதும் தேவன் நம்மை அழைப்பதில்லை என்பது நமக்கு ஆறுதலளிக்கும். இதைக்குறித்து பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே…” (வச. 6) எனக் கூறியுள்ளார்.
நம்மை சிருஷ்டித்த தேவன், அவருக்குள் நாம் கிரியை செய்யும்படி நமக்கு உதவி செய்வதினால், அவருக்கென்று நம்மை முற்றிலும் வெறுமையாக்கி, அவரை நம்பி நம் வாழ்வை அவருடைய கைகளில் ஒப்புக்கொடுப்போமாக.
நம்மை முற்றிலும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுப்பதில் எவ்வித ஆபத்துமில்லை.