எங்கள் மகன் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் போராடிக்கொண்டிருந்த ஏழு ஆண்டுகளும், நானும் என்னுடைய மனைவியும் அநேக கடினமான நாட்களை அனுபவித்தோம். எங்கள் மகனுடைய பரிபூரண விடுதலைக்காக ஜெபித்து காத்திருந்த பொழுது, சின்னஞ்சிறு வெற்றிகளை கொண்டாடக் கற்றுக்கொண்டோம். தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் எவ்வித மோசமான சம்பவமும் நிகழவில்லை என்றால், நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இன்றைய நாள் நன்றாகவே இருந்தது,” எனக் கூறிக் கொள்வோம். சின்ன காரியங்களிலும் வெளிப்படும் தேவனுடைய உதவியை எண்ணி நன்றிகூற நினைப்பூட்டும் வாக்கியமாக அது மாறியது.

ஆனால், இதைக்காட்டிலும் ஒரு சிறந்த வாக்கியம், “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்” சங்கீதம் 126:3ல் புதைந்துள்ளது. இது தேவனுடைய கனிவான இரக்கங்களையும், அதினால் தேவன் நமக்கு பாராட்டின இரக்கத்தை நினைவூட்டி, அதை நம் இருதயத்திலே பதிய வைக்க சிறந்த வசனம். நாம் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வின் துயரங்கள், எவ்விளைவை உண்டாக்கினாலும், ஏற்கனவே தேவன் வெளிப்படுத்திய அன்பு, “அவர் கிருபை என்றுமுள்ளது,” (சங். 136:1) என்கிற சத்தியத்தை பறைசாற்றுகிறது.

நாம் ஒரு கடினமான சூழ்நிலையை கடந்து வந்து, தேவன் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து, அதனை மனதிலே பதிய வைத்துக் கொண்டால், ஒருவேளை மறுபடியும் அதே பாதையைக் கடக்க நேர்ந்தால், அவ்வெளிப்பாடு நமக்கு பெலனளிக்கும். நம்முடைய சூழ்நிலைகளைக் கடந்து வர தேவன் எவ்வாறு உதவி செய்வார் என்பதை நாம் அறியாமலிருக்கலாம், ஆனால் கடந்த காலத்தில் அவர் நமக்கு பாராட்டின இரக்கம், அவர் நிச்சயமாக இப்பொழுதும் உதவி செய்திடுவார் என விசுவாசிக்க உதவிடும்.