2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முழு உலகத்தின் கவனமும், சிலி (Chile) தேசத்தின் கோபியாபோ (Copiapo) என்னும் இடத்திலுள்ள சுரங்க குழியின் மீதே இருந்தது. ஏனெனில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 2300 அடி ஆழத்தில், 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தார்கள். பூமிக்கடியில் இருளிலே அகப்பட்டுக்கொண்டிருந்த அவர்களுக்கு எப்பொழுது உதவி வரும் என்று தெரியாது. பதினேழு நாட்கள் காத்திருப்பிற்குப் பின் துளை போடும் சத்தத்தை கேட்டார்கள். மீட்புக் குழுவினர் சுரங்கக் குழிக்குச் செல்லும் சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சிறு துளைகள் போட்டு, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்ப வழி உண்டாக்கினார். அச்சுரங்க தொழிலாளிகள் பூமியின் மேற்பரப்பிலிருந்து மீட்புக் குழுவினர் அனுப்பும் பொருட்களை கொண்டு பிழைத்திருக்க அம்மூன்று வழிகளையே சார்ந்திருந்தனர். 69ஆம் நாள் அக்குழியிலிருந்த கடைசி சுரங்கத் தொழிலாளியும் மீட்கப்பட்டான்.
இவ்வுலகில் நம்மையும் தாண்டி உள்ள வளத்தையும் ஆதாரத்தையும் ஒதுக்கிவிட்டு, நம்மால் வாழ இயலாது. அண்டசராசரங்களையும் படைத்த சிருஷ்டி கர்த்தாவே நம் தேவை அனைத்தையும் சந்திக்கிறவர். அச்சுரங்க தொழிலாளிகளின் தேவைகளை சந்திக்க உதவிய அத்துளைகள் போல, நம்முடைய தேவை அனைத்தையும் சந்திக்கும் தேவனோடு நம்மை இணைப்பது நம்முடைய ஜெபங்களே.
“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்று ஜெபிக்கும்படி இயேசு உற்சாகப்படுத்துகிறார். அடிப்படை தேவையான ஆகாரத்திற்காக ஜெபிக்க கூறுவதின் மூலம் நம்முடைய அன்றாட வாழ்வின் அனைத்து தேவைகளையும் அவர் நமக்கு அளிக்க விரும்புவதை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, சரீரப்பிரகாரமான தேவைகள் மட்டுமின்றி சுகம், தைரியம், ஞானம் மற்றும் ஆறுதல் ஆகிய அனைத்தையும் அளிக்க விரும்புகிறார்.
ஜெபத்தின் மூலம் எக்கணமும் அவரை அணுகமுடியும். மேலும் நாம் கேட்கும் முன்னமே நம்முடைய தேவைகள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கின்றார் (வச. 8). நீங்கள் எவ்வகையான தேவையோடு இன்று போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்… கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).
தேவன் எல்லாவற்றையும் அறிந்தவராயும், நம்மை விசாரிக்கிறவராயும் இருக்கிறார் என்கிற விசுவாசத்தோடு எழுப்பும் சத்தமே ஜெபம்.