இயேசுவினுடைய பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளில் மேய்ப்பர்கள் இயேசுவை மாட்டுத் தொழுவத்தில் கண்ட அதே வேளையில், கிழக்கத்திய ஞானிகளும் பெத்லகேமிலே இயேசுவைக் கண்டது போல விவரிக்கப்பட்டிருக்கும். மத்தேயு சுவிசேஷத்தில் மாத்திரமே சாஸ்திரிகள் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஞானிகளின் வருகை சிறிது காலம் கழித்தே நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் இயேசுவை மாட்டுத் தொழுவத்திலன்றி ஒரு வீட்டிலேயே கண்டார்கள். “அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” என்று மத்தேயு 2:11 கூறுகிறது.
புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் நமக்கு, கிழக்கத்திய ஞானிகள் சிறிது காலம் கழித்து இயேசுவுக்கு செலுத்திய கனமும், துதியும் அவர் எப்பொழுதும் போற்றுதலுக்கும் ஆராதனைக்கும் உரியவர் என்பதை நினைவுபடுத்துகிறது. நம்முடைய விடுமுறை நாட்களெல்லாம் முடிந்து, சகஜ வாழ்க்கைக்கு நாம் திரும்பிய பின்பும், நம்முடைய கொண்டாட்டங்களுக்கு உரியவர் இப்பொழுதும் நம்மோடு உண்டு.
எல்லா காலக்கட்டத்திலும் “நம்மோடிருக்கும் தேவன்” இம்மானுவேலாகிய இயேசு கிறிஸ்துவே (மத். 1:23). “சகல நாட்களிலும்” அவர் நம்மோடு இருப்பதாக வாக்கு பண்ணியுள்ளார் (மத். 28:20). அவர் எப்பொழுதும் நம்மோடு இருப்பதினால், நம்முடைய இருதயங்களில் ஒவ்வொரு நாளும் அவரை துதித்து, ஆராதித்து இனி வரும் வருடங்களிலும் அவர் நமக்கு உண்மையுள்ளவராய் இருப்பார் என நம்பிக்கை கொள்வோமாக. கிழக்கத்திய ஞானிகள் அவரை தேடிக் கண்டடைந்தது போல நாமும், நாம் இருக்கும் இடத்திலேயே நம்முடைய இருதயங்களில் அவரைத் தேடி ஆராதிப்போமாக.
கிறிஸ்துவை நாம் கண்டடையும்பொழுது,
நம்முடைய ஆராதனையை அவருக்கு அளிக்கிறோம்.