கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை குறித்து பேசும் பொழுது, சில சமயம் நமக்கு விளங்காமலேயே அல்லது சரியாக விளக்காமல் சில வார்த்தைகளை உபயோகிக்கிறோம். அதில் ஒரு வார்த்தை தான் நீதிமான்! நம் தேவன் நீதிபரராயிருப்பதினால், அவர் நம்மை நீதிமானாக்குகிறார் என்கிறேன். ஆனால் இக்காரியத்தை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.

நீதி என்னும் வார்த்தை சீன மொழியில் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் நமக்கு மிக உதவியாக இருக்கும். அவ்வார்த்தை, இரண்டு வார்த்தைகளை ஒருங்கிணைத்த ஒரு வார்த்தையாக உள்ளது. மேலே உள்ள வார்த்தை ‘ஆட்டுக்குட்டி’ கீழே உள்ள வார்த்தை ‘நான்’. ஆட்டுக்குட்டியானது அந்நபரை மூடிக்கொள்கிறது அல்லது அவனுக்கு மேல் உள்ளது.

இயேசு இப்பூமிக்கு வந்த பொழுது, யோவான் ஸ்நானகன் அவரைப் பார்த்து, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவா. 1:29) என்று கூறினார். தேவனுடைய பண்பும், வழிகளும் எப்பொழுதும் சரியானதாகவும், நேர்த்தியாகவும் இருப்பதனால் நம்முடைய பாவம் அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. ஆகவே நம்முடைய பாவத்தை நீக்க வேண்டும். தேவன் நம்மை மிகவும் நேசித்ததினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை, “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி. 5:21). ஜீவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு தன்னுடைய இரத்தத்தை சிந்தி தன்னையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். அவராலே நாம் மூடப்பட்டிருக்கிறோம். அவர் நம்மை நீதிமானாய் மாற்றியதால், தேவனோடு நல்லுறவு கொள்ளும்படி உதவியுள்ளார்.

தேவன் முன் நீதியாய் இருப்பது என்பது அவராலே நமக்கு கிடைத்த ஈவு.