என்னுடைய கணவர் போதகராக உள்ள ஆலயத்தின் அருகில் எங்கள் வீடு உள்ளது. ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான வேளையிலே, என் வீட்டு தோட்டத்தில் அமர்ந்தவாரு, ஆலயத்திலிருந்து பாரசீக மொழியில் மிதந்து வந்த துதி ஆராதனை சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தேன். லண்டனில் உள்ள எங்கள் ஆலயத்தில் உற்சாகமிக்க ஈரானிய அங்கத்தினர் உள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட சில உபத்திரவங்களைப் பற்றி கேட்கும்பொழுது, கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய வாஞ்சையை அறிந்து கொள்ளலாம். அவற்றோடு ஒப்பிடும்பொழுது நாம் நம்மை சிறியவர்களாக எண்ணக்கூடும். உதாரணத்திற்கு, கிறிஸ்துவை விசுவாசித்ததினால் தன் உயிரைத் துறக்க நேர்ந்த தலைமைப் போதகருடைய சகோதரனின் தியாகம். இந்த உண்மையான விசுவாசிகள், முதலாவது இரத்தசாட்சியான ஸ்தேவானுடைய வழியை பின்பற்றுகிறார்கள்.

ஆதி திருச்சபையிலே முதலாவதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான ஸ்தேவான், “பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்” (அப். 6:8) செய்த பொழுது, எருசலேமிலே அநேகரால் கவனிக்கப்பட்டு, யூத அதிகாரிகள் முன்பு, தன்னுடைய செய்கைகளுக்கு விளக்கமளிக்குமாறு கொண்டு செல்லப்பட்டான். அவனை குற்றப் படுத்தியவர்களின் இருதய கடினத்தை விவரிக்கும் முன்பு, கிறிஸ்துவின் மேலுள்ள தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து உணர்ச்சிமிக்க விளக்கமளித்தான். அதைக்கேட்டு மனந்திரும்புவதற்கு பதிலாக அவர்கள் “மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லை கடித்தார்கள்” (7:54). ஆத்திரமடைந்த அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து கல்லெறிந்து கொன்று போட்டார்கள். அவனோ அப்பொழுதும் அவர்களை மன்னிக்குமாறு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.

கிறிஸ்துவின் சுவிசேஷம் மூர்க்கத்தனமான எதிர்ப்பை உண்டுபண்ணக் கூடும் என்பதை ஸ்தேவான் மற்றும் இன்றைய இரத்த சாட்சிகளின் கதைகள்மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை நம்முடைய விசுவாசத்தினிமித்தம் நாம் எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இன்று உலகத்தில் உபத்திரவப்படும் சபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும்; ஒருவேளை நாமும் சோதிக்கப்பட்டால் நமக்காக எல்லா பாடுகளையும் அனுபவித்த கிறிஸ்துவின் முன்பு உண்மையுள்ளவர்களாய் நிற்க கிருபை பெறுவோமாக.