இடாஹோ (Idaho) என்னும் இடத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு மேற்கில் ஜூக்கான்டால் (Jughandle) சிகரத்தின் மலைமடிப்புகளின் மத்தியில் ஒரு பனிப்பாள ஏரி உள்ளது. இந்த உறைந்த ஏரிக்குச் செல்லும் பாதை மிகவும் செங்குத்தான, பாதுகாப்பற்ற வழி. அதுமட்டுமன்றி வழியெங்கும் கற்பாறைகளும், சிதறுண்டு கிடக்கும் கற்களும் இருக்கும். அது ஒரு கடினமான மலையேற்றமாகும்.
ஆனால், இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு ஓடை உள்ளது. பாசிபடர்ந்த லேசான மணற்பரப்பிலிருந்து நீருற்று கசிந்து ஒரு பசுமையான புல்வெளியின் ஊடாய் ஓடுகின்றது. இது கடினமான மலையேற்றத்திற்குமுன் நன்கு நீர் அருந்தி, நம்மை தயார்படுத்திக் கொள்ள ஏற்ற ஒரு அமைதியான இடம்.
கிறிஸ்தவ வாழ்வை சிறப்பாக உருவகப்படுத்திய ஜான் பனியனின் “மோட்சப் பிரயாணம்” (The Pilgrim’s Progress) என்னும் இலக்கியத்தில், ‘கடின மலை’ என்று அழைக்கப்படும்; செங்குத்தான மலையின் அடிவாரத்திற்கு கிறிஸ்தியான் வருகிறான். “அந்த அடிவாரத்தில் ஓர் ஓடை இருந்தது. கிறிஸ்தியான் அந்த ஓடைக்கு சென்று நீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மலையேறத் தொடங்கினான்.”
ஒரு வேளை நீங்கள் எதிர்கொள்ளும் அந்தக் கடினமான மலை உங்கள் முரட்டாட்டமான பிள்ளையாக இருக்கலாம் அல்லது ஒரு முக்கியமான மருத்துவ சோதனையின் முடிவாக இருக்கலாம். நீங்கள் எதிர்கொள்ளும் சவால் உங்களால் தாங்க முடியாத ஒன்றாகத் தோன்றலாம்.
ஆகவே நீங்கள் உங்களுடைய அடுத்த முக்கியமான பணியை மேற்கொள்ளும் முன்பு, புத்துணர்வளிக்கும் நீருற்றுக்கு செல்லுங்கள். அதாவது தேவனிடம் செல்லுங்கள். உங்களுடைய பெலவீனம், சோர்வு, உதவியற்ற நிலை, பயம், சந்தேகம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவருடைய வல்லமையை, பெலத்தை, ஞானத்தை நிறைவாய்ப் பருகுங்கள். தேவன், உங்களுடைய எல்லா சூழ்நிலைகளையும் அறிவார், ஆவிக்குரிய பெலத்தையும், சமாதானத்தையும் அளவில்லாமல் அளிப்பார். அவர் உன் தலையை உயர்த்தி, நீ செல்லுவதற்கு வேண்டிய பெலத்தை உனக்களிப்பார்.
எல்லாவற்றின் மேலும் ஆளுமை செலுத்துகிறவர், கிறிஸ்தவனைப்
பெலப்படுத்தி, அவன் வழியில் பயணிக்கச் செய்தார். ஜான் பனியன்,மோட்சப் பிரயாணம்